பொதுத்துறை சொத்துக்களை தனியார் மயமாக்குவதா? மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்த முதலமைச்சர்!

0
85

பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துக்கள் எதையும் விற்பனை செய்யக்கூடாது என சட்டசபையில் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தேசிய பணமாக்கல் என்ற திட்டத்தின் கீழ் வருவாய் கொடுக்கக்கூடிய பொதுத்துறை நிறுவனங்களான விமான நிலையங்கள் ரயில் நிலையங்களில் தனியார் முதலீட்டை அனுமதி வழங்கி அதன் மூலமாக லட்சம், கோடி உள்ளிட்ட விவரங்களை திரட்டும் முடிவில் மத்திய அரசு இறங்கி உள்ளது. அதாவது அரசு சொத்துக்களை தனியார் நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விட்டு நான்கு வருடங்களில் 6 லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்ட மத்திய அரசு திட்டம் ஒன்றை வகுத்து இருக்கிறது.

இதற்கு பல மாநில முதலமைச்சர்களும், அரசியல் கட்சி தலைவர்களும், கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து வருகின்ற சூழலில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 70 வருட காலமாக இந்தியா உருவாக்கிய சொத்துக்களை வெறும் 7 வருட காலங்களில் பிரதமர் நரேந்திர மோடி விற்றுவிட்டார். இந்தியாவின் பொருளாதாரத்தை சிதைத்தவர்கள் அதை எப்படி மீட்பது என்று தெரியாமல் வேறு வழி இல்லாமல் எல்லாவற்றையும் தனியாரிடம் கொடுத்து விடுகிறார்கள் என்று விமர்சனம் செய்தார்.

இந்த சூழ்நிலையில், இன்றைய தினம் நடந்த தமிழக சட்டசபை கூட்டத்தில் பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துகளை மத்திய அரசு தனியாருக்கு விற்பது குறித்து காங்கிரஸ் சட்டசபை உறுப்பினர் செல்வபெருந்தகை கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார்.அந்த சமயத்தில் துறைமுகங்கள் விமான நிலையங்கள் உள்ளிட்டவற்றை விற்பதற்கு மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. இதனை தடுத்து நிறுத்தி பொதுத்துறை சொத்துக்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

இதற்கு பதிலளித்து உரையாற்றிய தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பொதுத்துறை சொத்துக்களை தனியார் மயமாக்குவதை தமிழக அரசு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. தனியார்மயமாக்கல் நடவடிக்கையின்போது மத்திய அரசு மாநில அரசுடன் கலந்தாலோசிக்க வேண்டும் லாபகரமாக இயங்கும் தொழிற்சாலைகளை விற்க முயற்சி செய்வதை தமிழக அரசு தடுத்து நிறுத்த முயற்சி செய்யும் என்று கூறியிருக்கிறார்.

இதனை அடுத்து உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின் நாட்டின் பொதுத்துறை நிறுவனங்கள் நாம் அனைவரின் சொத்தாகும். பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதல் தேச நலனுக்கு எதிரான செயல் பொருளாதார நலனுக்கும் சிறு மற்றும் குறு தொழிலுக்கும் ஆணிவேராக பொதுத்துறை நிறுவனங்கள் இருக்கின்றன. பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துக்களை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும் என்று தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுத இருப்பதாக விளக்கமளித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.