மெல்லக் கொல்லப்படும் நூலகங்கள் – அரசியல் வாதிகளின் அலட்சியமா ? இல்லை அறியாமையா? விரிவான அலசல்

0
85

மெல்லக் கொல்லப்படும் நூலகங்கள் – அரசியல் வாதிகளின் அலட்சியமா ? இல்லை அறியாமையா ? விரிவான அலசல்

கதையும் வாசிப்பும் :

கடந்த 70 மற்றும் 80 களில் பொதுவாக ஒர் இரயில் பயணத்தில் பயணிக்கும் அனைவரின் கையிலும் வார இதழ்கள், நாவல்கள் அநேகமாக ஏதேனும் அவர்களுக்கு பிடித்த சில தமிழ்ப் புத்தகங்கள் இருக்கும். ஆனால் இன்றைய பயணத்தில் கண்ணில் படுவது காதில் மாட்டிய ஹெட்போனுடன் தங்களின் செல்பேசியில் புதையுண்டு போயிருக்கும் மனிதர்களை தான். இதில் வயது வித்தியாசம் ஏதும் இல்லை . நேற்றுப் பிறந்த குழந்தை முதல் 80 வயதுக்கு மேற்பட்ட பெரியோர் வரையில் அனைவரும் ஒரே மாதிரி தான் விதிவிலக்காக சிலர் புத்தகங்களுடன் இருக்கலாம்.

சிறுவயதில் கதை கேட்டு வளர்ந்து அதைக் காட்சிப் படுத்தி வளர்ந்த குழந்தையும் இன்றைய ஸ்மார்ட்போன்/டேப்லெட் குழந்தைகளும் ஒப்பிடவே முடியாதவர்கள். திரும்பத் திரும்ப கேட்கும் கதைகள் அலுத்தபின் அக்குழந்தைகள் தானாகவே புத்தகங்களைத் தேடிப் போனார்கள். அவர்களுக்கு வசதியாக ஆங்காங்கே அமைந்துள்ள நூலகங்கள் உதவின. அக்குழந்தைகள் போலில்லாமல் இன்றைய குழந்தைகளுக்கு இணையம் அலுப்பதே இல்லை.

கிண்டிலின் அசுர வளர்ச்சி:

ஒரு தாய் தன் குழந்தையைத் தொட்டு அணைத்து முத்தமிடுவதற்கும் ஸ்கைப் காலில் குழந்தையைக் கொஞ்சுவதற்குமான வித்தியாசமே அச்சிடப் பட்ட புத்தகங்களுக்கும் அமேசான் கிண்டில் ஆப்பில் படிப்பதற்கும் இடையேயானது போல தான். இப்போது புகழ்பெற்ற பதிப்பகங்கள் பல தங்கள் புத்தகங்களை நேரடியாய் கிண்டிலும் அச்சிலும் வெளியிடுகின்றன. அச்சிடப்படும் பிரதிகள் பெரும்பாலும் விற்பனையாவதில்லை. கிண்டிலில் வெளியிடப்படும் புத்தகங்கள் உடனே தரவிறக்கம் செய்யப்பட்டு வாட்ஸப் குரூப்களில் அனுப்ப்படுகின்றன. இதற்கு புக் பைரஸி என்று பெயர் . பதிப்பகங்கள் குறைந்தது ஆறு மாத / ஒரு வருட இடைவெளி அச்சுப் பிரதிக்கும் கிண்டில் வெளியீட்டிற்கும் இருப்பின் எழுத்தாளர்களின் உழைப்பிற்கான மதிப்பு கொஞ்சமாவது கிடைக்கும். பதிப்பகங்கள் சிந்திக்குமா ? புத்தகத் திருவிழா கண்காட்சி என்று பெருநகரங்களில் நடத்தப்படுவதென்னவோ உண்மை தான். கடைக்கோடி கிராமத்தில் இருக்கும் வாசகனின் நிலை என்ன?

மெல்ல கொல்லப்படும் நூலகங்கள் :

கிராமங்களில் ஏன் நகரங்களிலுமே செலவு செய்து புத்தகங்களை வாங்கி வாசிக்க முடியாத வாசகர்களுக்கென ஏற்படுத்தப் பட்ட அமைப்பே நூலகம். தமிழ்நாட்டில் மொத்தம் 4532 நூலகங்கள் உள்ளன. பாதி அளவு கூட இதில் செயல்படுவதில்லை. மாநில நூலகங்கள் மற்றும் மாவட்ட மைய நூலகங்கள் ஓரளவு புத்தகங்களுடனும் வாசகர்களுடனும் செயல்பட்டுக் கொண்டிருக்கையில் கிளை நூலகங்களும் கிராமப்புற நூலகங்களே அழிவின் வாயிலில் நின்று கொண்டிருக்கிறது. இவற்றின் எண்ணிக்கை ஏறத்தாழ 3800 என கணக்குகள் தெரிவிக்கின்றன. பகுதி நேர நூலகங்கள் பெரும்பாலானவை செயல்படுவதில்லை. தமிழ்நாட்டு நூலகங்கள் அனைத்தும் கல்வித்துறையின் கீழ் வருகின்றது. அரசால் இந்த நூலகங்களுக்கு வருடம் ஒன்றுக்கு ஏறக்குறைய 28 கோடி ஒதுக்கப்படுகிறது. நூலக ஆணை ஒன்று பிறப்பிக்கப்படுகிறது .பதிப்பகங்கள் தங்களுடைய அன்றைய வருட பதிப்புகளை அரசின் அனுமதிக்காய் அனுப்பி வைக்கின்றன. இதில் தேர்வு செய்யப்படும் நூல்கள் வாங்கப்பட்டு நூலகங்களுக்கு அரசால் அனுப்பி வைக்கப்படுகிறது. நாம் கட்டும் வரிப்பணத்தில் இருந்தே இந்த நூலக நிதி ஒதுக்கப்படுகிறதென்பதையும் நினைவில் கொள்க.

நூலகத்துறை ஆணையர் உதயச்சந்திரன் ஐஏஎஸ் வகுத்தளித்த திட்டங்கள் ஏன் செயல்படுத்தப் படவில்லை . நூலகங்களுக்கான நிரந்தர கட்டடங்கள் ஏன் கட்டித்தரப் படவில்லை. இடிந்த நிலையில் மழை நீர் உள்புகுந்து நூற்றுக்கணக்கான புத்தகங்கள் சேதமாகிக் கொண்டிருக்கின்றன . சாகித்ய அகாதமி யுவபுரஸ்கார் விருது பெற்ற புத்தகங்களுக்கு நூலக ஆணை மறுக்கப் பட்டிருப்பது ஏன் ? இருப்பிட வசதி இல்லாத நூலகங்களை அரசுக் கட்டடங்களுக்கு எப்போது மாற்ற போகிறார்கள்? நிரந்தர நூலகர்கள் பணியமர்த்தப் படாதது ஏன் ? ஏற்கனவே உள்ளவர்களுக்கு பத்து ஆண்டுகளுக்கு மேலாய் பதவி உயர்வு தரப்படாததேன் ? இதையெல்லாம் பார்க்கும் போது பேய்கள் அரசால்கையயில் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்பது தான் நினைவிற்கு வருகிறது.

கம்ப இராமாயணத்தை சேக்கிழார் எழுதினார் எனக்கூறும் முதல்வரிடமும்,ஒரு பழமொழியை கூட சரியாக சொல்ல தெரியாத எதிர்க்கட்சி தலைவரிடமும் இதெல்லாம் எதிர்பார்ப்பது மக்களின் தவறே. இவற்றையெல்லாம் தற்போதுள்ள பதிப்பகங்கள் எல்லாம் ஒன்று கூடி சாதிக்கலாம் . பதிப்பகங்களின் இடையே இருக்கும் உட்பூசல் மறந்து இதற்காக ஒன்று படுவார்களா ? இது சாத்தியம் இல்லையெனில் இக்காலக் குழந்தைகளுக்கு பள்ளி மற்றும் கல்லூரி நூலகங்கள் மட்டுமே தெரியவரும். அனைத்தும் இப்போது கணிணி மயமாக்கப்பட்டு இணையத்தில் பதிவு செய்யப்படுவதால் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு அச்சுப் பிரதி புத்தகங்கள் மியூசியத்தில் மட்டுமே காணக் கிடைக்கும்.

author avatar
Parthipan K