சேலத்தில் இரண்டாக உடையும் திமுக! அதிருப்தி நிர்வாகிகளுடன் அணி திரளும் எம்பிக்கள்

0
252

சேலத்தில் இரண்டாக உடையும் திமுக! அதிருப்தி நிர்வாகிகளுடன் அணி திரளும் எம்பிக்கள்

மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி காலம் தொட்டே சேலம் மாவட்ட திமுக என்பது தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறது என்பது கடந்த கால அரசியல் அறிந்த பலருக்கும் தெரியும். அப்போது அமைச்சராக பதவி வகித்த திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான வீரபாண்டி ஆறுமுகம் பல்வேறு விவகாரங்களில திமுக தலைமைக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு நிகழ்வுகளில் திமுக தலைவர் கருணாநிதிக்கு எதிராகவே வீரபாண்டி ஆறுமுகம் கருத்து தெரிவித்துள்ளார் என்பதையும் பெரும்பாலோனோர் அறிவர்.

இந்நிலையில் வீரபாண்டி ஆறுமுகம் மறைவிற்கு பின்னர் அவர் குடும்ப உறுப்பினர்களை புறக்கணித்து விட்டு தலைமைக்கு ஆதரவாக உள்ளவர்களை கொண்டு கட்சியை கட்டமைக்கும் வேலையில் தற்போதைய திமுக தலைவராக உள்ள ஸ்டாலின் முயற்சித்தார்.ஆனால் அவர் முயற்சி தற்போது வரை பலனளிக்காமல் சேலம் மாவட்ட திமுக நிர்வாகிகளுக்குள் எப்போதும் ஒரு பனிப்போர் நடந்த வண்ணமேயுள்ளது.

அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் தொகுதிக்கு உட்பட்ட கொளத்தூர் ஒன்றியத்தில் மீண்டும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதாவது கொளத்தூர் ஒன்றியத்தில் சிறப்பாக பணியாற்றி வந்த தவசிராஜா மற்றும் பேரூர் செயலாளரான தட்சிணா மூர்த்தி உள்ளிட்டோரை நீக்கி விட்டு மாவட்ட செயலாளரான டி.எம்.செல்வகணபதி தனக்கு ஆதரவாக உள்ள உறவினரான மிதுன் என்பவரை நியமித்துள்ளார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக இவரால் நியமிக்கப்பட்ட மிதுன் பண மோசடியில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இது குறித்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோபாலிடம் திமுக தொண்டர்கள் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து கோபால் Ex MLA அவர்கள் மாவட்ட செயலாளர் டி.எம்.செல்வகணபதி அவர்களை சந்தித்து விளக்கம் கேட்டுள்ளார். இதற்கு பதிலளித்த டி.எம்.செல்வகணபதி மாவட்ட செயலாளராக உள்ள தனக்கு எல்லா அதிகாரமும் உள்ளதென்றும்,யாரிடமும் ஆலோசிக்க தேவையில்லை என்றும் அதிகாரமிக்க தோணியில் பதிலளித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனையறிந்த திமுக தொண்டர்கள் அதிருப்தியடைந்த நிலையில் டி.எம்.செல்வகணபதிக்கு எதிராக திமுக தலைமை நடவடிக்கை எடுக்க கோரி தொகுதி முழுவதும் நோட்டீஸ் அடித்து பகிர்ந்து வருகின்றனர். மேலும் இதை கண்டிக்கும் விதத்தில் டி.எம்.செல்வகணபதிக்கு எதிராக தருமபுரி எம்.பி செந்தில்குமார்,சேலம் மாவட்ட எம்.பி SR பார்த்திபன்,மாவட்ட செயலாளர் சிவலிங்கம் உள்ளிட்டோர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோபாலுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் கூறப்படுகிறது. இதை உறுதி செய்யும் வகையில் கடந்த வாரம் பிறந்தநாள் கொண்டாடிய கோபால் Ex MLA அவர்களுக்கு டி.எம்.செல்வகணபதி ஆதரவாளர்கள் தவிர்த்து மற்ற அனைவரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மேலும் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் வீரபாண்டியார் மகனான பிரபு தனது ஆதரவாளர்களுடன் கோபால் Ex MLA வீட்டிற்கே சென்று பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டது மாவட்டத்தில் உட்கட்சி பிரச்சனையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளது. தமிழகத்தில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக திமுக தலைமை தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் சேலம் மாவட்டத்தில் நிலவி வரும் உட்கட்சி பூசல் காரணமாக கட்சி இரண்டாக உடையும் சூழல் உருவாகியுள்ளது.

author avatar
Ammasi Manickam