ஒரு வருஷமா சரிசெய்ய முடியாத பிரச்சனை! மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சித்த பெண்கள்!

0
81

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார்.

அப்போது மேச்சேரி அருகேவுள்ள குக்கல்பட்டி காட்டுவளவு பகுதியை சேர்ந்த 10க்கும் மேற்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார்கள்.

இவர்களில் மோகலட்சுமி, சத்யா, பரமேஸ்வரி, அலமேலு, மணிமேகலை, உள்ளிட்ட 5 பெண்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார்கள். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையை சேர்ந்தவர்கள் தீக்குளிக்க விடாமல் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள்.

அவர்களிடம் இருந்து காவல் துறையை சார்ந்தவர்கள் மண்ணெண்ணெய் கேனை வாங்கிக்கொண்டு பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்திய போது அவர்கள் தெரிவித்ததாவது, கடந்த ஒரு வருட காலமாக பொது வழித்தட பிரச்சனை காரணமாக, கடுமையான சிரமத்தை சந்தித்து வருகின்றோம்.

காவல் நிலையம் மற்றும் அரசு அலுவலகங்களில் மனு கொடுத்தும் எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று தெரிவித்திருக்கிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக தெரிகிறது.