நடுவழியில் பிரதமரின் வாகனத்தை மறித்த போராட்டக்காரர்கள்! அதிரடியில் இறங்கிய மத்திய உள்துறை!

0
59

நேற்று முன்தினம் பஞ்சாப் மாநிலத்தில் பெரோஸ்பூரில் நலத்திட்ட உதவிகளை ஆரம்பித்து வைத்து எதிர்வரும் பஞ்சாப் மாநில சட்டசபைத் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டிருந்தார். அதற்காக அவர் பதிண்டா விமான தளத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலமாக செல்ல வேண்டிய சூழல் இருந்தது. ஆனாலும் மேகமூட்டம் காரணமாக, அது ரத்து செய்யப்பட்டது. ஆகவே சாலை மார்க்கமாக சென்ற பிரதமர் நரேந்திர மோடி ஒரு மேம்பாலத்தில் விவசாயிகளின் போராட்டங்களால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

20 நிமிடங்கள் பிரதமரின் வாகனம் ஒரு மேம்பாலத்தில் தவித்த சூழ்நிலையில், அதன் பிறகு திரும்பி சென்று விட்டார் பிரதமர் என்று சொல்லப்படுகிறது. அவருடைய நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.

இந்த சூழ்நிலையில், இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு பஞ்சாப் மாநில காங்கிரஸ் அரசு இரண்டு பேர் கொண்ட உயர்மட்டக் குழுவை அமைத்து இருக்கிறது. இந்த குழு விசாரணையை ஆரம்பித்து விட்டது. இந்த சூழ்நிலையில், நேற்றைய தினம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இது தொடர்பாக தனியாக விசாரணை ஆணையம் அமைத்து இருக்கிறார்.

மத்திய அமைச்சரவை செயலகத்தின் செயலாளர் சுதீர்குமார் சக்சேனா தலைமையிலான குழுவில் உளவுத்துறை இணை இயக்குனர் பல்பீர் சிங் மற்றும் பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படை பிரிவில் ஐஜி சுரேஷ் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இதற்கு நடுவில் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் மத்திய அரசும், மாநில அரசும், விசாரணை ஆணையங்களை அமைத்திருக்கின்றனர். விசாரணைக்குப் பிறகு பிரதமரின் பாதுகாப்பு மீறல் குறித்த அனைத்து தகவல்களையும் சேகரித்த பின்னர் அரசு மிகப்பெரிய மற்றும் கடினமான முடிவுகளை மேற்கொள்ளும் என்று தெரிவித்திருக்கிறார்.

இதற்கு நடுவில் ஹுசைனிவாலா எல்லைக்குச் செல்லும் சாலையில் பிரதமரின் பாதுகாப்பு வாகனத்தை தடுத்த அடையாளம் தெரியாத போராட்டக்காரர்கள் மீது பஞ்சாப் மாநில காவல்துறை வழக்குப் பதிவு செய்திருக்கிறது.

பஞ்சாப் மாநில முதலமைச்சர் சரண்சிங் சன்னி இது தொடர்பாக தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, ஏஐசிசி பொறுப்பாளர் ஹரிஷ் சவுத்ரி மூலமாக எனக்கு ஒரு செய்தியை அனுப்பி இருக்கிறார்.

அதில் மோடி நாட்டின் பிரதமர் அவருடைய பாதுகாப்பில் ஏதாவது குறைபாடு இருந்தால் அது தொடர்பாக விசாரணை நடத்தி குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார் நாங்கள் விசாரணை ஆணையம் அமைத்து இருக்கிறோம் என்று தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும், பஞ்சாப் மாநில முதலமைச்சர் இடம் பேசியிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.