2 நாள் பயணமாக ஜனாதிபதி திரௌபதி முர்மு நாளை தமிழகம் வருகை!

0
457
#image_title

 2 நாள் பயணமாக ஜனாதிபதி திரௌபதி முர்மு நாளை தமிழகம் வருகை!

ஜனாதிபதி திரௌபதி முர்மு 2 நாள் பயணமாக நாளை தமிழகம் வருகிறார். திரௌபதி முர்மு ஜனாதிபதியாக பதவி ஏற்ற பிறகு முதன் முறையாக தமிழகத்திற்கு வரும் முர்மு மதுரை, கோவை ஆகிய இடங்களுக்கு செல்கிறார். ஜனாதிபதி வருகையை முன்னிட்டு, மதுரை விமான நிலையத்திலும், அங்கிருந்து அவர் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்லும் பாதையிலும், கோவில் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து பிற்பகலில் மீண்டும் விமான நிலையம் புறப்படுகிறார். மதுைரயில் இருந்து விமானத்தில் கோவை செல்கிறார். 

கோவை ஈஷா யோகா மையத்தில், மகா சிவராத்திரி விழா நாளை மாலை, 6 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. அங்கு ஆதியோகி சிலை மற்றும் தியானலிங்கத்தில் பஞ்சபூத ஆராதனையுடன் நிகழ்ச்சி தொடங்குகிறது. இந்த விழாவில், தலைமை விருந்தினராக ஜனாதிபதி திரௌபதி முர்மு கலந்து கொள்கிறார். இதற்காக ஜனாதிபதி திரௌபதி முர்மு மதுரையில் இருந்து நாளை மாலை தனி விமானத்தில் புறப்பட்டு மாலை 3.10 மணிக்கு கோவை விமான நிலையம் வந்தடைகிறார். ஈஷா யோகா மையத்துக்கு மாலை 6 மணிக்கு செல்கிறார். 

நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை கோவை விமான நிலையத்துக்கு காரில் சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்துக்கு புறப்பட்டு செல்கிறார். வெலிங்டன் ராணுவ மையத்தில் ஜனாதிபதி முர்மு கலந்து கொண்டு ராணுவ அதிகாரிகளுடன் கலந்துரையாடுகிறார். மேலும் போரில் உயிர்நீத்தவர்களுக்கு நினைவு தூணில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார். இந்த நிகழ்ச்சி காலை 10 மணி முதல் 12 மணி வரை நடைபெறுகிறது. அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கோவை விமான நிலையம் சென்று டெல்லி திரும்புகிறார் திரௌபதி முர்மு. ஜனாதிபதி வருகையை முன்னிட்டு, 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். மேலும் வெளி மாவட்டங்களில் இருந்தும் போலீசார் கோவைக்கு வரவழைக்கப்பட்டு உள்ளனர். 

author avatar
Parthipan K