மகப்பேறு மருத்துவமனையில் மருத்துவர்களின் அலட்சியத்தால் கர்ப்பிணி பெண் உயிரிழப்பு!

0
168
#image_title

மகப்பேறு மருத்துவமனையில் மருத்துவர்களின் அலட்சியத்தால் கர்ப்பிணி பெண் உயிரிழப்பு!

சென்னை புளியந்தோப்பு மகப்பேறு மருத்துவமனையில் மருத்துவர்களின் அலட்சியத்தால் கர்ப்பிணி உயிரிழந்துவிட்டதாக கூறி, உயிரிழந்த கர்ப்பிணின் உறவினர்கள் எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புளியந்தோப்பு மகப்பேறு மருத்துவமனையில் மருத்துவர்களின் கவனக்குறைவின் காரணமாக தனது மனைவி உயிரிழந்ததாக, உயிரிழந்த கர்ப்பிணியின் கணவர் குற்றஞ்சாட்டி உள்ளார்.

சென்னை, கே.பி.பார்க் பகுதியைச் சேர்ந்தவர் கோட்டீஸ்வரன்(31). ஓட்டுநராக பணிபுரிந்து வரும் இவர் நிறைமாத கர்ப்பினியான தனது மனைவி ஆனந்தி (எ) ஜனகவள்ளி(27)-யை நேற்று காலை 10 மணியளவில், 2வது பிரசவத்திற்காக புளியந்தோப்பு பகுதியில் உள்ள மகப்பேறு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

நேற்று மாலை ஆனந்தி திடீரென்று மயங்கி விழுந்துவிட்டதாக கூறி புளியந்தோப்பு மருத்துவமனை செவிலியர்கள் அவரை மேற்சிகிச்சைக்காக சென்னை, எழும்பூர் மகப்பேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல கூறியுள்ளனர். இதனையடுத்து, எழும்பூர் மருத்துவமனைக்கு அவர் அழைத்து வரப்பட்ட நிலையில் அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஜனகவள்ளி இறந்துவிட்டதாக கூறி உள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த உயிரிழந்த ஜனகவள்ளியின் உறவினர்கள், புளியந்தோப்பு மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளிக்கப்படாததன் காரணமாகதான், அவர் இறந்துவிட்டார் எனவும் புளியந்தோப்பு மருத்துவமனையிலேயே இறந்துவிட்ட ஆனந்தியை ஆம்புலன்ஸ் மூலம் இங்கு அழைத்து வந்துவிட்டதாகவும், குற்றஞ்சாட்டி எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால், அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்ட நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக போலீசார் குவிக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த உயிரிழந்த ஜனகவள்ளியின் கணவர் கோட்டீஸ்வரன்,காலை முதல் மாலை வரை எனது மனைவி நன்றாகத்தான் இருந்தார்.

எனது மனைவி எப்படி இறந்தார் என தெரியவில்லை. புளியந்தோப்பு மகப்பேறு மருத்துவமனையில் எனது மனைவிக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை. அவர் புளியந்தோப்பு மருத்துவமனையிலேயே இறந்துவிட்டார்.

அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட போது நான் அங்குதான் இருந்தேன் அவரது இதயத்துடிப்பு அங்கேயே நின்றுவிட்டது. அங்கிருந்து மேற்சிகிச்சை எனக் கூறி அவரை எழும்பூர் மகப்பேறு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல சொன்னார்கள் ஆனால் அவர் அங்கேயே இறந்துவிட்டார்.

எழும்பூர் மருத்துவமனைக்கு கொண்டு வந்ததும் முதலில் குழந்தையை காப்பாற்றதான் மருத்துவர்கள் முயன்றனர். ஆனால் குழந்தையும் இறந்துவிட்டது. புளியந்தோப்பு மருத்துவமனையில் மருத்துவர்கள் என்னை சந்திக்கவே இல்லை. எனது மனைவிக்கு என்ன நடந்தது என்று கூட என்னிடம் கூறவில்லை.

செவிலியர்கள்தான் பேசினார்கள் எனக்கு நடந்தது வேற யாருக்கும் நடக்க கூடாது. அவசரத்திற்கு அழைத்தால் கூட மருத்துவர்கள் வருவது இல்லை. எனது முதல் குழந்தை புளியந்தோப்பு மருத்துவமனையில்தான் பிறந்தான். அந்த நம்பிக்கையில்தான் மீண்டும் அங்கு சேர்த்தேன். போதுமான மருத்துவர்கள் அங்கு இல்லை எனத் தெரிவித்தார்.

இதனிடையே, இதுகுறித்து உயிரிழந்த பெண்ணின் கணவர் கோட்டீஸ்வரன் அளித்த புகாரின்பேரில் புளியந்தோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், உயிரிழந்த ஜனகவள்ளியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அவரது கணவரிடம் கூட தெரிவிக்காமல் ஸ்டான்லி மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுவிட்டதாக கூறி போலீசாரிடம் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

author avatar
Savitha