பொங்கல் தொகுப்பு பொருட்கள் தரமானது! அமைச்சர் சக்கரபாணி நேரில் ஆய்வு!

0
87

பொங்கல் தொகுப்பு பொருட்கள் தரமானது! அமைச்சர் சக்கரபாணி நேரில் ஆய்வு!

பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படும் பொருட்கள் மிகவும் தரமானதாக இருக்கும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் சக்கரபாணி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் பொங்கல் தொகுப்பில் வழங்க உள்ள பச்சரிசி, சர்க்கரை மற்றும் ரேஷன் கடைகளில் வழங்க உள்ள பொருட்களின் தரம் குறித்து நேரில் ஆய்வு செய்தார். 2.19  கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்க இருப்பதால் இன்று முதல் டோக்கன் விநியோகம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

ஜனவரி 9ஆம்தேதி முதல்வர் பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கி துவக்கி வைப்பார். இதனை அடுத்து அனைத்து மாவட்டங்களின் நியாய விலை கடைகளிலும் ஜனவரி 9 முதல் 12-ம் தேதி வரை  நான்கு நாட்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும்.

பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள், மாதந்தோறும் வழங்கும் பொருட்கள் 60 விழுக்காடு அனைத்து மாவட்டங்களிலும் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு நாட்களில் 100% கொண்டு சேர்க்கப்படும்.

கடந்தாண்டு திருப்பத்தூர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய இரண்டு மாவட்டங்களில் பொங்கல் தொகுப்பு பொருட்கள் தர மற்றவையாக இருந்தன என புகார் வந்ததை அடுத்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதனால் இந்த ஆண்டு அனைத்து பொருட்களும் தரம் ஆய்வு செய்த பின்னே அனுப்பப்பட்டுள்ளது. எனவே பொங்கல் பொருட்கள் தரமானவையாக இருக்கும்.

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு இடைத்தரகர்கள் இல்லாமல் விவசாயிகளிடம் கரும்பு நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றது. விவசாயிகளுக்கு பயன் அளிக்கும் வகையில் ஒரு கரும்பின் விலை 33 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அகதிகள் முகாமில் உள்ள  19, 269 தமிழர் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. மேலும்  பொங்கல் பரிசு தொகுப்பு பெற முடியாதவர்களும் வெளியூரில் வசிப்பவர்களும்,  விடுபட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஜனவரி 13 அன்று பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி  செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.