தமிழ்நாட்டில் 2வது வருடமாக காணாமல் போன காணும் பொங்கல்!

0
74

நோய் தொற்றின் 3வது அலை தற்சமயம் மிகவும் தீவிரமாக இருக்கிறது, ஆகவே தமிழ்நாட்டில் சென்ற 6ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருக்கிறது அதன் அடிப்படையில் கடந்த 9ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் முழுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.

இந்த சூழ்நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை என்ற காரணத்தால், 2வது வாரமாக முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது, இதன் மூலமாக தமிழ்நாடு முழுவதும் அத்தியாவசிய சேவைகளை தவிர்த்து அனைத்து கடைகளும் மூடப்பட்டன. வாகன நடமாட்டம் எதுவும் இல்லாமல் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன.

தலைநகர் சென்னையில் நேற்று முழுமையான ஊரடங்கு தீவிரமாக அமல்படுத்தப்பட்டது, அத்தியாவசிய சேவைகளான பெட்ரோல் பங்குகள், பாலகங்கள், மருந்தகங்கள், மருத்துவமனைகள், அவசர ஊர்தி சேவைகள், உள்ளிட்ட வழக்கம்போல செயல்பட்டனர்.

அந்த விதத்தில் தலைநகரில் கடைகளுக்கு முழுமையான விடுமுறை வழங்கப்பட்டது. உணவு விடுதிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டு இருந்தாலும் 80 சதவிகித உணவு விடுதிகள் நேற்று செயல்படவில்லை. திறந்திருந்த ஒரு சில உணவகங்களிலும் பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இதன் காரணமாக, சென்னை தியாகராயநகர், வண்ணாரப்பேட்டை, பாரிமுனை, பெரம்பூர், அண்ணாநகர், உட்பட கடைவீதிகள் நிறைந்த பகுதிகள் நேற்று வெறிச்சோடி இருந்தன. சென்னையில் குட்டி வணிக தீவு என்று சொல்லப்படக்கூடிய தியாகராயநகர், ரங்கநாதன் தெரு, பரபரப்பு இல்லாமல், ஆள் அரவம் இல்லாமல் நேற்று வெறிச்சோடி காணப்பட்டது.

முழுமையான ஊரடங்கை முன்னிட்டு சென்னையில் நேற்று அனைத்து சாலைகளும் வாகன நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி இருந்தது. நகரின் முக்கிய சாலைகள் மெரினா காமராஜர் சாலை, அண்ணா சாலை, என் எஸ் சி போஸ் சாலை, உள்ளிட்டவை அனைத்தும் தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டனர்.

சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்த பகுதிகளில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்கள். சாலையில் தேவையின்றி சுற்றிய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

காணும் பொங்கல் என்றாலே தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் உற்சாகம் கரை புரண்டு ஓடும் நாள் அதன் காரணமாக, அன்றைய தினம் உறவினர்களை சந்தித்து பொதுமக்கள் மனம்மகிழ்வார்கள், சுற்றுலாத் தலங்களுக்கு குடும்பத்துடன் சென்று பொழுதைக் கழித்து உற்சாகம் அடைவார்கள், ஆனாலும் நோய்த்தொற்று பரவி வருவதன் காரணமாக, இந்த காணும் பொங்கல் காணா தினமாக மாறிவிட்டது என்பது நிதர்சனமான உண்மை. நோய்த்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக சென்ற வருடம் காணும்பொங்கல் கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டது. இந்த வருடம் முழுமையான ஊரடங்கு காரணமாக, காணும்பொங்கல் காலை இழந்து போனது.

இதன் காரணமாக, காணும் பொங்கல் தினத்தன்று உற்சாகம் கரை புரண்டு ஓடும் கடற்கரைகள், உயிரியல் பூங்காக்கள், சிறுவர் விளையாட்டு திடல், உள்ளிட்ட பொழுதுபோக்கு தளங்கள் நேற்று முழுமையான ஊரடங்கு காரணமாக, வெறிச்சோடி காணப்பட்டது. முழுமையான ஊரடங்கு என்பதால் பொதுமக்களும் நேற்று வீடுகளிலேயே முடங்கி இருந்தார்கள். அந்த விதத்தில் 2வது வருடமாக காணும்பொங்கல் களையிழந்து போனது.

முழுமையான ஊரடங்கு என்றாலும் தொடர்வண்டி சேவை நேற்று வழக்கம் போலவே செயல்பட்டது, சென்னையிலும் வழக்கம்போலவே தொடர்வண்டிகள் இயக்கப்பட்டன. அதேபோல மின்சார ரயில்கள் இயக்கப்பட்டன, இதன்காரணமாக தொடர்வண்டி நிலையங்களுக்கு செல்வோர் வாகனங்களில் பயணம் செய்தார்கள். காவல்துறையினர் சோதனையின்போது உரிய பயணச்சீட்டு மற்றும் அது தொடர்பான ஆவணங்களை காட்டிவிட்டு பயணத்தை தொடர்ந்தார்கள்.

முழுமையான ஊரடங்கு காரணமாக, நகரில் நேற்று பெரும்பாலான ஆட்டோக்கள், கால் டாக்சிகள், உள்ளிட்டவை இயக்கப்படவில்லை. ரயில் நிலையங்களை சுற்றி நிற்கும் ஒரு சில ஆட்டோக்கள் இயக்கப்பட்டன. அவ்வப்போது ஏகப்பட்ட ஆட்டோ மற்றும் கால் டாக்சிகள் கூடுதல் கட்டணம் கேட்டதாக பயணிகள் குற்றம்சாட்டியிருந்தார்கள்.