புதுச்சேரியில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய அமைச்சர் வெளியிட்ட புதிய திட்டம்

0
141
#image_title

புதுச்சேரியில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய அமைச்சர் வெளியிட்ட புதிய திட்டம்

 

புதுச்சேரியில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் நெய்வேலி என்.எல்.சி யில் இருந்து குழாய் மூலம் குடிநீர் கொண்டு வரப்படும் எனவும், கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் சோதனை அடிப்படையில் தொடங்கியுள்ளதாக பேரவையில் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் அறிவித்தார்.

 

புதுச்சேரி சட்டபேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரில் மானியக்கோரிக்கையின் மீது உறுப்பினர்கள் பேசியதை தொடர்ந்து பொதுப்பணித்துறை மற்றும் மீன் வளத்துறை பொறுப்பு வகிக்கும் அமைச்சர் லட்சுமிநாராயணன் பேரவையில் இன்று தனது துறையின் மூலம் செயல்படுத்தப்படவுள்ள திட்டங்களை அறிவித்தார்.

அந்த வகையில், புதுச்சேரியில் கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் நெய்வேலி என்எல்சியில் இருந்து வெளியாகும் நீர் கடலூர் மாவட்டத்திற்கு செயல்படுத்துவது போல் புதுச்சேரிக்குக்கு குழாய் மூலம் கொண்டு வந்து செயல்படுத்த என்.எல்.சி நிறுவனத்திடம் கோரியுள்ளதாகவும் இரண்டு நாள்களில் இதன் முடிவு தெரியவரும் என்றும் அவ்வாறு கிடைக்கும் சுமார் 10 எம்.எல்.டி தண்ணீரை கொண்டு வரவுள்ளோம். அங்கிருந்து குழாய்கள் மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நகரப்பகுதிக்கு கொண்டு வந்து புதுச்சேரி நகரின் குடிநீர் தேவையை தீர்க்க திட்டமிட்டுள்ளோம் என அமைச்சர் லட்சுமிநாராயணன் தெரிவித்தார்.

மேலும் புதுச்சேரியில் கடலோரமாக உள்ள நிலத்தடி நீர் உள்ள அபாயகரமான சிவப்பு மண்டல பகுதியில் உள்ள குடும்பத்தினர் ஒவ்வொருவருக்கும் தினமும் சுத்தகரிக்கப்பட்ட 20 லிட்டர் குடிநீர் இலவசமாக தரப்படும் என்றும் அவர் கூறினார்.

புதுச்சேரியில் 184.07 கிமீ தொலைவில் ரூ. 106.26 கோடியில் தார் சாலைகள் போடப்பட்டுள்ளதாகவும், நகரின் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக, கிழக்கு கடற்கரைச்சாலை மற்றும் விமானநிலைய சாலை சந்திப்பில் தொடங்கி ராஜீவ்காந்தி சதுக்கம், இந்திராகாந்தி சதுக்கம் வரையில் ரூ. 440 கோடியில் மேம்பால கட்டுமானப்பணிகள் வரும் ஜுன் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசு கட்டிடங்கள், வீடுகளில் அனைத்திலும் மழைநீர் சேகரிப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், வீடுகளில் அவ்வாறு மழை நீர் தேக்கும் அமைப்பு அமைக்காத வீடுகளுக்கு, கட்டடங்களுக்கு அபராதம் விதிக்கவும் உத்தேசித்துள்ளோம் எனவும் அமைச்சர் லட்சுமிநாராயணன் தெரிவித்தார்.

மேலும் புதுச்சேரி நகரில் நிலத்தடி நீரின் தன்மை பாதிக்கப்பட்டுள்ளதால் கிராமப்பகுதிகளில் இருந்து குடிநீர் கொண்டு வர கிராமப்பகுதிகளில் இருந்து 40 இடங்களில் ஆழ்குழாய் கிணறு அமைக்க பிரெஞ்சு அரசு நிதியுதவியுடன் திட்டம் தயாரிக்கப்படவுள்ளது. இதற்கு ரூ. 380 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

புதுச்சேரியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் துவக்கவுள்ளதாகவும் முதற்கட்டமாக கடல் நீரை 0.5 எம்எல்டி குடிநீராக உற்பத்தி செய்ய உப்பளம், பிள்ளைச்சாவடி பகுதிகளில் சோதனை முறையில் இரண்டு சுத்திகரிப்பு நிலையங்கள் வரும் நிதியாண்டில் அமைக்கப்படும் என்றும் புதுச்சேரியில் உலகத்தரம் வாய்ந்த வசதியுள்ள டிஜிட்டல் அருங்காட்சியகம் அமைக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் லட்சுமி நாராயணன் அறிவித்துள்ளார்.