நாளை பட்டமளிப்பு விழா..! புதுச்சேரி பல்கலை கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி மாணவர்கள் தொடர் போராட்டம்!!

0
61

நாளை பட்டமளிப்பு விழா..! புதுச்சேரி பல்கலை கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி மாணவர்கள் தொடர் போராட்டம்!!

புதுச்சேரியில் உள்ள மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை சிறப்பிக்க துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு வர இருக்கிறார். இந்நிகழ்ச்சிக்கான வாகன ஒத்திகை இன்று நடைபெற்றது. இந்த ஒத்திகையில் பொதுமக்கள் சாலையை சரியாக பயன்படுத்து அறிவுறுத்தல், அந்த வழியாக வரும் வாகனங்களை நிறுத்துவது, பாதுகாப்பை உறுதி செய்யும்படி செயல்பட்டனர்.

நாளை நடைபெறவுள்ள நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரியை அடைந்து, பின்னர் பலத்த பாதுகாப்பு செய்யப்பட்ட அரசு கார்களின் மூலம் கிழக்கு கடற்கரை வழியாக மத்திய பல்கலைக்கழகத்திற்கு செல்கிறார். பட்டமளிப்பு விழாவில் சரியாக காலை 10:30 மணிக்கு பங்கேற்க இருக்கிறார். நிகழ்ச்சி முடிந்த பிறகு மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் டெல்லி புறப்படுகிறார். இதன் காரணமாக புதுச்சேரி பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கட்டண உயர்வை வாபஸ் பெறக்கோரி இரண்டு வாரங்களாக பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். மாணவர்களின் தொடர் போராட்டம் குறித்து ஆளும்கட்சியா காங்கிரஸோ அதன் கூட்டணியான திமுக கட்சியோ மற்றும் எதிர்கட்சிகளிலோ எந்த வித கருத்தும் தெரிவிக்காமல் அமைதி காத்து வருகிறது. இதனால் மாணவர்கள் ஒட்டுமொத்த புதுச்சேரி அரசின் மீதும் அதிருப்தியில் உள்ளதோடு கடுமையாக குற்றம் சாட்டி வருகின்றனர்.

மாணவர்களின் கல்வியை பாதிக்கும் வகையில் உள்ள கட்டண உயர்வை கண்டித்தும், கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று, மத்திய பல்கலை மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக புதுச்சேரி முழுவதும் உள்ள மாணவர்கள் இன்றைய வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து புதுச்சேரி அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் சாலையில் ஊர்வலமாக சென்று கட்டண உயர்வுக்கு எதிராக தனது கண்டனத்தை பதிவு செய்தனர். தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கல்லூரி மாணவர் அமைப்பின் சார்பாக நாளை கறுப்புகொடி போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்லூரி செலவினங்களை சமாளிக்கவே கட்டண உயர்வு ஏற்றப்பட்டுள்ளது என்றும், மாணவர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஏற்கனவே கட்டணத்தை குறைத்தாகிவிட்டது என்றும் பல்கலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மாணவர்கள் 100% கட்டண உயர்வை திரும்ப பெற கூறுகின்றனர். கட்டண உயர்வை திரும்ப பெற முடியாது என்று பல்கலை நிர்வாகத்தினர் அதிரடியாக கூறியுள்ளனர்.

author avatar
Jayachandiran