பொள்ளாச்சி பாலியல் வழக்கு! வலுக்கும் கண்டனங்கள்!

0
102

பாலியல் வன்கொடுமை வழக்கிலிருந்து, ஆளும்தரப்பு தங்கள் கட்சியினரை காப்பாற்றியிருப்பதாக எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின் குற்றம் சுமத்தியிருக்கிறார்.

பொள்ளாச்சியிலே, மாணவிகள், மற்றும் இளம்பெண்களை சமூக வலைதளம் மூலமாக பழகி அவர்களை தனி இடத்திற்கு வரச் சொல்லி மிரட்டி பாலியல் தொந்தரவு தந்து காணொளி எடுத்த விவகாரம் தமிழகம் முழுவதிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த வழக்கிலே, இரண்டு வருடங்களுக்குப் பிறகு அதிமுகவின் பொள்ளாச்சி நகர மாணவர் அணிச் செயலாளர் அருளானந்தம், உள்பட மூன்று நபர்களை சிபிஐ அதிகாரிகள் இன்றைய தினம் கைது செய்திருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து அருளானந்தம் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டார்.

இது குறித்து ஸ்டாலின் இன்றைய தினம் வெளியிட்டிருக்கிற அறிக்கையிலே, சுமார் ஆறு ,ஏழு வருடங்களாக பல நூறு பெண்கள் சீரழக்கப்பட்ட பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடைய நகர மாணவரணிச்செயலாளர், மற்றும் அவருடைய கூட்டாளிகளை சிபிஐ கைது செய்து இருக்கிறது. பாலியல் வழக்கில் தொடர்புள்ள தன்னுடைய கட்சியினரை அதிமுக அரசு காத்து வருகிறது. என ஸ்டாலின் விமர்சனம் செய்திருக்கின்றார்.

தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்பு இருக்கும் குற்றவாளிகளில் ஒருவர் கூட தப்பித்துவிட சிபிஐ அனுமதிக்கக் கூடாது. அவர்கள் விரைவாக தண்டிக்கப்படவேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தி இருக்கிறார்.

தமிழகத்தையே உலுக்கி எடுத்த இவ்வழக்கில், மேலும் 3 நபர்கள் இரண்டு வருடங்களுக்குப்பின் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். மீதமிருக்கும் குற்றவாளிகளை விரைவாக கைதுசெய்யவேண்டும் என, டி.டி.வி. தினகரன் தெரிவித்திருக்கிறார்.

அதோடு அப்பாவி பெண்கள் பாதிப்பு கொள்வதற்கு காரணமாக இருப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு தாமதம் இல்லாமல் நீதி கிடைக்க சிபிஐ நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கேட்டுக் கொண்டிருக்கிறார்.