பெண் பூசாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த கும்பல்! போலீஸ் பாதுகாப்பு போட்ட நீதிமன்றம்!

0
78

உசிலம்பட்டியில் இருக்கின்ற துர்க்கையம்மன் கோவிலில் பெண் பூசாரிக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

உசிலம்பட்டி நல்ல தேவன் பட்டி சார்ந்தவர் பின்னி அக்காள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இவர் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். என்னுடைய தந்தை பின்னதேவர் நீல நாயக்கன்பட்டியில் இருக்கின்ற ஸ்ரீ துர்கை அம்மன் திருக்கோவிலில் பூசாரியாக இருந்தார். உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார் அவருடைய மறைவிற்கு பின்னர் அவருடைய வாரிசான நான் அந்த கோவிலில் பூஜை செய்து வருகின்றேன். நான் பெண் என்ற காரணத்தால், நான் பூஜை செய்வதற்கு கிராமத்தைச் சார்ந்த ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்து என்னுடைய பணியை செய்யவிடாமல் இடையூறு செய்து வருகிறார்கள் .இதனையடுத்து நான் பூசாரியாக பணிபுரிய வட்டாட்சியர் தடைவிதித்து இருக்கின்றார்.

இந்த தடையை அகற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நான் தொடர்ந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி பூசாரியாக பணியாற்ற தடைவிதித்த வட்டாட்சியருக்கு கண்டனம் தெரிவித்து மறுபடியும் என்னை பூசாரியாக நியமனம் செய்து 2008ஆம் வருடம் உத்தரவிட்டிருந்தார்.

இதனை உயர்நீதிமன்ற அமரவும் உறுதி செய்தது. இந்த நிலையில், உசிலம்பட்டி உரிமையியல் நீதிமன்றம் நான் பூசாரியாக இருப்பதற்கு 2010ஆம் ஆண்டு அனுமதி கொடுத்தது.

ஆனாலும் நான் என்னுடைய பணியை செய்வதில் மலையன் என்ற வாசுதேவன், குருநாதன், மாசாணம் ,பூங்கொடி ஆகியோர் தொடர்ச்சியாக தொல்லைகள் கொடுத்து வருகிறார்கள். கோவிலுக்கு போகும் வழியிலே மரித்து பெட்ரோல் ஊற்றி எரித்தும் அரிவாளால் வெட்டியும், கொலை செய்து விடுவோம் என்று மிரட்டுகிறார்கள். இதுகுறித்து உசிலம்பட்டி காவல் நிலையத்தில் கடந்த நவம்பர் மாதம் ஐந்தாம் தேதி புகார் அளித்தேன் அதன் மீது எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

உயர் நீதிமன்றம், மற்றும் உரிமையியல் நீதிமன்றம் ஆகிய நீதிமன்றங்கள் அனுமதி அளித்தும் பணியை செய்யவிடாமல் சென்ற 12 வருடங்களாக தடை விதித்து வருகிறார்கள். ஆகவே எனக்கு மிரட்டல் விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கும், நான் மறுபடியும் தொந்தரவு இல்லாமல் என்னுடைய பணியை செய்வதற்கும் காவல்துறை பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.

இந்த மனுவானது நேற்றைய தினம் நீதிபதி நிஷா பானு முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுவை விசாரித்த அவர் பூசாரி எந்த ஒரு தடங்கலும் இன்றி பணியை செய்யும் வகையில், அவருக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.