பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி! கடவுள் போல காப்பாற்றிய காவலர்! உண்மையான துரைசிங்கத்திற்கு பொதுமக்கள் பாராட்டு..!!

0
109

பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி! கடவுள் போல காப்பாற்றிய காவலர்! உண்மையான துரைசிங்கத்திற்கு பொதுமக்கள் பாராட்டு..!!

பிரசவ வலியல் துடித்த பெண்ணை சரியான நேரத்தில் காவல்துறை அதிகாரி மருத்துவமனைக்கு அனுப்பிய நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.

கொரோனா பாதிப்பின் காரணமாக இந்தியா முழுவதும் தேசிய ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள காரணத்தால் பொதுமக்கள் யாரும் வெளியில் வரமுடியாத சூழல் நிலவுகிறது. உலக நாடுகளில் பெரும் உயிரிழப்பை ஏற்படுத்திய கொரோனா இந்தியாவில் 1000 பேரை பாதித்தது மற்றும் 19 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். நாளுக்கு நாள் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

தமிழகத்தின் 144 தடையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவினால் வெளிநாடு மற்றும் வெளியூர் போன்ற இடங்களில் குடும்பத்தைப் பிரிந்து பலர் தவிக்கின்றனர். 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவில் சில தினங்கள் மட்டுமே கடந்துள்ள நிலையில், மக்களின் அன்றாட தேவைக்கு வெளியில் செல்வதும் சொந்த ஊருக்கு வந்து சேர்வதிலும் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ஊரடங்கு உத்தரவால் கணவன் சென்னையில் சிக்கிக் கொண்ட சூழலில், பிரசவ வலியால் துடித்த பெண்ணை காவல்துறை உதவி ஆய்வாளர் காப்பாற்றிய சம்பவம் நடந்துள்ளது. மதுரை தேவி நகர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர், சென்னையில் உள்ள நிதிநிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஸ்ரீமதி மதுரையில் வசித்து வந்துள்ளார். விடுமுறையின் காரணமாக சொந்த ஊருக்கு செல்ல மணிகண்டன் தயாராக இருந்த நிலையில் போக்குவரத்து முடக்கம் மற்றும் மாவட்ட எல்லைகள் முடக்கம் காரணமாக மதுரைக்கு செல்ல முடியவில்லை.

இதனையடுத்து, ஸ்ரீமதிக்கு திடீரென்று பிரசவ வலி அதிகரித்து உறவினர் முருகேசன் என்பவரிடம் வலியில் துடித்தபடி கூறினார். இக்கட்டான சூழலில் வாகனம் இல்லாமல் தவித்த முருகேசன் வேகமாக அங்கிருந்த காவல் சோதனைச் சாவடிக்கு சென்று அவசர தகவலை கூறியுள்ளார். தகவலை கேட்ட காவல்துறை உதவி ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் உடனடியாக அந்தவழியே சென்ற காரை மறித்து கர்ப்பிணியை அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும், டீசல் செலவுக்கான பணத்தையும் கொடுத்து வேகமாக செல்ல அறிவுறுத்தினார்.

சரியான நேரத்தில் கர்ப்பிணியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றதால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பின்னர் ஆபத்தான நேரத்தில் சிறப்பாக செயல்பட்ட உதவிஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் அவர்களை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் பாராட்டினார். இச்சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதால் காவல் உதவி ஆய்வாளருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

author avatar
Jayachandiran