நில அபகரிப்பு புகாரில் தலைமறைவாக இருந்த திமுக நிர்வாகி கைது

0
99
Police Arrested DMK Person
Police Arrested DMK Person

நாகை மாவட்டத்தை சேர்ந்த கீழையூர் ஒன்றிய திமுக செயலாளரான தாமஸ் ஆல்வா எடிசன் நில அபகரிப்பு புகார் காரணமாக சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட தாமஸ் ஆல்வா எடிசன் நாகப்பட்டிணம் மாவட்டம் வேளாங்கண்ணி பகுதியை சேர்ந்தவர். திமுகவை சேர்ந்தவரான இவர் கீழையூர் ஒன்றிய செயலாளராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு தாமஸ் ஆல்வா எடிசன் மீது நாகை அதிமுக நகர செயலாளரான தங்க.கதிரவன் நாகை நில அபகரிப்பு பிரிவு காவல்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்து இருந்தார்.

அவர் அளித்திருந்த இந்த புகாரில், நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருள்மிகு ரஜதகிரீஸ்வரர் திருக்கோயில், புனித வேளாங்கண்ணி திருத்தல பேராலயம், அரசு புறம்போக்கு மற்றும் சுனாமி குடியிருப்பு உள்ளிட்ட சொத்துக்களை போலி ஆவணங்கள் தயார் செய்து அதன் மூலமாக தாமஸ் ஆல்வா எடிசன்  அபகரித்து உள்ளார். எனவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அதில் தெரிவிக்கபட்டிருந்தது. இதை தொடர்ந்து, தாமஸ் ஆல்வா எடிசன் மீது, நில அபகரிப்பு காவல்துறையினர் 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.

இந்நிலையில் இன்று காலை சென்னை சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதியில் தங்கி இருந்த தாமஸ் ஆல்வா எடிசனை நாகை நில அபகரிப்பு பிரிவு டிஎஸ்பி சரவணன் தலைமையிலான காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அதேபோல அதிமுகவை சேர்ந்த வேளாங்கண்ணி பகுதியை சேர்ந்த 7 பேர்கள் மீது திமுக சார்பாக நில அபகரிப்பு புகார் அளிக்கப்பட்டு அதுகுறித்தும் விசாரணை நடந்து வருவதால் நாகை எஸ்பி அலுவலகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

author avatar
Ammasi Manickam