பீட்சா வீடு தேடி வரும் போது ரேஷன் பொருட்கள் வரக்கூடாதா? அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி!

0
59
Arvind Kejriwal
Arvind Kejriwal

பீட்சா வீடு தேடி வரும் போது ரேஷன் பொருட்கள் வரக்கூடாதா? என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.

டெல்லி மாநிலத்தில் ரேஷன் பொருட்களை வீடுகளுக்கே கொண்டு சென்று டெலிவரி செய்ய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நடவடிக்கை எடுத்து வருகிறார். இதற்கான திட்டத்தை கடந்த மார்ச் மாதம் வகுத்து திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு தடைகளை உடைத்து விடுகளில் ரேஷன் பொருட்கள் விநியோகிக்கும் திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார். ஆனால் 2 நாட்களில் திட்டம் நிறுத்தப்பட்டது. இதுகுறித்து பதிலளித்துள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மத்திய அரசு ரேஷன் பொருட்களை வீடுகளில் வழங்கும் திட்டத்தை நிறுத்தி விட்டதாக குற்றம் சாட்டினார்.

பீட்சா, பர்கர், ஸ்மார்போன், துணிகள் எல்லாம் வீடு தேடி வரும் போது, ஏன் ரேஷன் பொருட்கள் வரக்கூடாது என அவர் கேள்வி எழுப்பினார். ரேஷன் மாஃபியாவுக்கு எதிராக முதல் முறையாக மிகப்பெரிய திட்டத்தை செயல்படுத்தியதாக தெரிவித்த அரவிந்த் கெஜ்ரிவால், ரேஷன் மாஃபியாக்கள் எந்த அளவுக்கு சக்தி வாய்ந்தவர்களாக இருந்தால் ஒருவாரத்தில் திட்டத்தை முடக்கியிருப்பார்கள் என கூறியுள்ளார்.

டெல்லி, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், ஜார்கண்ட், லட்சத்தீவுகள், விவசாயிகள் என அனைவரிடமும் மத்திய அரசு சண்டையிடுவதாக அவர் குற்றம் சாட்டினார். அனைவரிடமும் சண்டையிடுவதாக் மக்கள் மன அழுத்தத்தில் இருப்பதாக கூறிய அரவிந்த் கெஜ்ரிவால், இப்படியே சண்டையிட்டுக் கொண்டிருந்தால், கொரோனாவை எப்படி எதிர்கொள்ள முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தத் திட்டத்தை செயல்படுத்தினால், முழு பெயரும் உங்களுக்கே(பிரதமர் மோடி) கிடைக்கும். ஆம் ஆத்மி கட்சிக்கோ, பாஜகவுக்கோ கிடையாது. மோடியும் அரவிந்த் கெஜ்ரிவாலும் இணைந்து ரேஷன் பொருட்களை விடு தேடி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்.

இந்தத் திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்குமாறு டெல்லியில் உள்ள 70 லட்சம் ஏழை மக்களின் சார்பாக இருகைகளையும் கூப்பி கேட்டுக் கொள்வதாக அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.