6 மாத குழந்தைக்கும் கொரோனா தடுப்பூசி! ஆனால் அதுவும் போதாது! செக் வைக்கும் மருந்து நிறுவனங்கள்!

0
68

அமெரிக்காவில், 6 மாத குழந்தை முதல் 5 வயது சிறுவர்கள் வரை உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி அளிக்குமாறு ஃபைசர் மற்றும் பையோன்டெக் நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன.

கொரோனா பெருந்தொற்று 2 ஆண்டுகளைக் கடந்து உலக நாடுகளை ஆட்டிப் படைத்து வருகிறது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த எத்தனை முயற்சிகள் எடுத்தாலும், அவை பலனற்றவையாகவே மாறுகின்றன. அதே நேரத்தில், தடுப்பூசி செலுத்திக் கொண்டால், மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதையும், உயிரிழப்பு ஏற்படுவதையும் தடுக்கலாம் என உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தி வருகிறது.

இதற்காக, உலகம் முழுவதும் ஒருசில நாடுகள் மட்டுமே தடுப்பூசிகளை தயாரித்து, தங்கள் நாட்டினருக்கும், மற்ற நாடுகளுக்கும் வழங்கி வருகின்றன. இதனால், வயது வாரியாக முக்கியமானவர்களுக்கு செலுத்தப்பட்டு வந்தது. 60 வயதுக்கு மேற்பட்டோர், இணை நோய் உள்ளவர்கள், முன்களப் பணியாளர்களுக்கு முதலில் தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45க்கு மேற்பட்டோர், 18 வயதுக்கு மேற்பட்டோர், 12 வயதுக்கு மேற்பட்டோர் என படிப்படியாக முன்னேறி, தற்போது 5 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்த அவசரகால அனுமதியை அமெரிக்கா வழங்கியுள்ளது.

இந்நிலையில், 6 மாத குழந்தைகள் முதல் 5 வயது குழந்தைகளை வரை உள்ளவர்களுக்கும் தடுப்பூசி செலுத்த அவசரகால அனுமதி கோரி, அமெரிக்க மருந்து மற்றும் உணவுத்துறையிடம் ஃபைசர் மற்றும் பயோன்டெக் நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன. முதற்கட்டமாக 2 தவணை தடுப்பூசிக்கு விண்ணப்பித்துள்ளதாக மருந்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

அதே நேரத்தில், மூன்றாவது தடுப்பூசி செலுத்திக் கொண்டால், எதிர்காலத்தில் வரும் புதிய வகை உருமாறிய வைரஸ்களையும் எதிர்கொள்ளலாம் என்பதால், இரண்டு தவணை தடுப்பூசிக்கு அனுமதி கிடைத்ததும், மூன்றாவது தவணை தடுப்பூசிக்கு விண்ணப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுவர்களுக்கு பக்க விளைவுகள் ஏற்படுவதைத் தவிர்க்க, குழந்தைகளுக்கு செலுத்தப்படும் தடுப்பூசியின் அளவை குறைக்க முடிவு செய்துள்ளதாக ஃபைசர் நிறுவனம் கூறியுள்ளது.

அமெரிக்கா முழுவதும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 2 கோடியே 30 லட்சத்திற்கும் அதிகமானோர் உள்ளனர். கொரோனா பெருந்தொற்று தொடங்கியதில் இருந்து, 4 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகள் 400க்கும் மேற்பட்டோர், கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதனால்,  விரைந்து ஆய்வுக்கு உட்படுத்தி, குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்த விரைவில் அனுமதி வழங்கப்படும் என அமெரிக்க மருந்து மற்றும் உணவுத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் 15 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.