கொரோனா சிகிச்சை முறையில் மக்களுக்கு அதிருப்தி!!

0
48

கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அறிகுறி உள்ளவர்களுக்கு அரசு மூலம் அளிக்கப்படும் சிகிச்சை முறைகள், மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கையை சம்பந்தப்பட்ட நபர்களின் பார்வைக்கு எடுத்துச் செல்வதே இல்லை என்றும் தொற்று பாதிப்பு உள்ளதா என்று பாதிக்கப்பட்டவர்களுக்கு தெளிவுபடுத்துவது இல்லை என்ற புகார்கள் உள்ளது.

சென்னை, நெசப்பாக்கம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருக்கிறது எனக் கூறி, கோவிட்-19 கேர் சென்டராக மாற்றப்பட்டுள்ள புளியந் தோப்பு வீட்டு வசதி வாரிய அடுக்குமாடிக் குடியிருப்புக்கு அழைத்துச் சென்று, நீண்ட நேரமாக வீதியில் அமர வைத்துள்ளனர். பின்னர், 8-வது தளத்தில் உள்ள ஒரு அறையில் தங்க வைத்துள்ளனர். மேலும், இவருக்கு சக்கரை நோய் உள்ள நிலையில், 5 நாட்கள் கடந்தும் ஒருமுறை மட்டுமே சர்க்கரை பாதிப்பு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் இவர் மிகுந்த மன அழுத்தத்துடனும் பயத்துடனும் அங்கு இருக்க வேண்டியிருக்கிறது என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து, அவரது மனைவிக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில், தொற்று அறிகுறிகள் இருக்கிறது என்று வாய்வார்த்தையில் தகவல் மட்டும் தெரிவித்தனர். இதுகுறித்து அந்தப் பெண் கூறுகையில், “உங்களுக்கு பாதிப்பு அறிகுறி தென்படுகிறது. இதனால் நீங்கள் 2 மாற்று உடைகளை எடுத்துக்கொண்டு நெசப்பாக்கம் மருத்துவமனைக்கு வந்துவிடுங்கள். சம்பந்தப்பட்ட மருத்துவமனை அல்லது தனிமைப்படுத்தும் முகாம் மையங்களுக்கு செல்லும் முன்பு, நெசப்பாக்கம் மருத்துவமனையில் பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறி, நீண்ட நேரம் காத்திருக்கச் செய்தனர். ஆனால், எனது மருத்துவப் பரிசோதனை அறிக்கையை கேட்டபோது தர மறுத்தனர். வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளவும் அனுமதிக்கவில்லை.

நீண்டநேரப் போராட்டத்துக்குப் பிறகு, எனது மருத்துவ அறிக்கையில் எந்தவிதப் பாதிப்பும் இல்லை, `ஹோம் ஐசோ லேஷன்’ எனக் குறிப்பிட்டு, மருந்துப் பெட்டகத்தை என்னிடம் வழங்க மருத்துவர் வந்தார். அப்போது அங்கு வந்த தன்னார்வலர்கள் சிலர், அவரை குறிப்பிட்ட தனிமைப்படுத்தும் முகாம் மையத்திற்கு அழைத்துச் செல்ல முடிவு செய்துள்ளோம்’ என்று கூறி, மருந்துப் பெட்டகம் வழங்குவதை தடுத்து, வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றனர். எங்கள் குழந்தைகளின் நிலையை அவர்கள் கண்டுகொள்ளவில்லை.

காவல் துறையினரை வரவழைத்து, ஆம்புலன்ஸில் ஏற்றி, டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் இறக்கிவிட்டனர். எங்கள் வாகனத்திலிருந்து இறங்கியவர்களுக்கு, 10 நாட்களுக்கான மாத்திரையை கொடுத்துவிட்டு சென்றுவிட்டனர். அங்குள்ள ஊழியரிடம் கேட்டபோது, படுக்கை எங்கு காலியாக இருக்கிறதோ அங்கு சென்றுவிடுங்கள் என்று கூறினர். ஒரே அறையில் பலரும் நெருக்கமாக இருக்கும் சூழலே அங்கு இருந்தது.

சுமார் 100 பேருக்கு ஒதுக்கப்பட்ட குளியலறை மற்றும் கழிப்பறையின் எண்ணிக்கை 5 மட்டுமே. அதிலும் தாழில்லாத கதவுகள். அங்கு அழைத்துச் சென்று 48 மணி நேரம் கடந்தும், உடல்நிலையைப் பரிசோதனை செய்ய மருத்துவர் யாரும் வரவில்லை. பல்வேறு கட்டப் போராட்டங்களுக்குப் பிறகு, வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள அனுமதி கிடைத்தது. வீட்டுக்கு வந்த பின்னரே அச்சம் நீங்கி மன அழுத்தமும் குறைந்தது.

இனியேனும், பாதிப்பு உள்ளவர்களை மட்டும் சரியாக அழைத்துச் சென்று, முறையான சிகிச்சை அளித்து, மக்களிடம் நம்பிக்கை ஏற்படுத்துவதே இதற்கெல்லாம் தீர்வாக இருக்கும்” என்று வேதனையுடன் கூறினார்.

author avatar
Parthipan K