தலைநகர் சென்னையில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை! நிம்மதி இழந்த சென்னைவாசிகள்!

0
86

தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, சென்னையில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதனடிப்படையில் சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய, விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. காலையில் சற்று நேரம் ஓய்வெடுத்த மழை மீண்டும் வேகமெடுக்க தியாகராய நகர், கேகே நகர், வடபழனி, கோடம்பாக்கம்,திருவான்மியூர், புரசைவாக்கம் உட்பட தாழ்வான பகுதிகளில் வழக்கம்போல மழை நீர் சூழ்ந்து தீவுகளை போல காட்சியளித்தன. நகரத்தின் பிரதான சாலைகளில் மழைநீர் தேங்கி குளம் போல காட்சி தந்தது.

இது ஒருபுறம் இருக்க பல பகுதிகளில் சாலைகளில் மேலிடத்துக்கு பெயர்ந்து குண்டும் குழியுமாக மாறியிருக்கின்றன அந்த சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு மிகவும் சவாலாக இருக்கிறது. சென்னை கேகே நகர், ராஜமன்னார் சாலையில் முட்டி அளவிற்கு மழை நீர் தேங்கி இருக்கின்றது. இதன் காரணமாக, அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடுமையான சிரமத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள். அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வெளியே சென்று பொருட்கள் வாங்க இயலாத நிலையில் தவித்து வருகிறார்கள்.

வடபழனி குமரன் காலனி பிரதான சாலையில் கழிவு நீருடன் மழைநீரும் சேர்ந்து தேங்கி நிற்கின்றது. அங்கே கடுமையான துர்நாற்றம் வீசுவதுடன் நோய் தொற்று பரவும் அபாயம் உண்டு ஆகியிருப்பதால் பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகளும், சென்னை குடிநீர் வடிகால் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய அதிகாரிகளும் தண்ணீரை விரைந்து அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் அருகில் இருக்கின்ற அக்பர் தெரு ,வீர செட்டி தெரு மற்றும் ராமகிருஷ்ணன் தெருவை ஒன்றாக இணைக்கும் குறுக்குச் சாலையில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது இதன் காரணமாக, குடியிருப்பு வாசிகள் மிகுந்த அவதிக்கு உள்ளாகி இருக்கிறார்கள். வீட்டுக்குள் புகுந்த மழைநீரை மோட்டார் மூலமாக அவர்கள் வெளியேற்றி இருக்கிறார்கள். அதோடு சாலையில் முட்டி அளவிற்கு நீர் தேங்கி இருப்பதால் அந்த பகுதியில் உள்ள விடுதிகளுக்கு செல்பவர்களும் பொதுமக்களும் கடுமையானது சிரமத்தை சந்திக்க வேண்டியிருக்கிறது.

வில்லிவாக்கம் பேருந்து நிலையம் முன்பு குளம்போல மழைநீர் தேங்கியது இதன் காரணமாக, பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். புரசைவாக்கம் தாணா தெரு, செல்லப்பா தெரு, உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் தேங்கி இருக்கிறது இதன் காரணமாக, அந்த வழியே அந்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் மிகவும் சிரமப்பட்டனர். கொளத்தூர் பெரியார் நகரில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து தேங்கியது. இதனை தொடர்ந்து பேப்பர் மில் சாலையில் மோட்டார் மூலமாக தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதேபோன்று நகரத்தின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் வடியாமல் தேங்கி இருக்கின்றன. கனமழையின் காரணமாக ,சென்னை மாவட்டத்தில் இருக்கின்ற பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.

தானா தெருவில் இருக்கின்ற டாஸ்மாக் கடை முன்பு தண்ணீர் தேங்கி இருந்தது இருந்தாலும் மது பிரியர்கள் குடை பிடித்தவாறு கொட்டும் மழைக்கு இடையிலும் டாஸ்மாக் கடை நோக்கி படை எடுக்கத் தொடங்கினார்கள். ஒருவருக்கொருவர் கைத்தாங்கலாக மழைநீரை கடந்து சென்று உற்சாகமாக மதுபானங்களை வாங்கி சென்றதாக சொல்லப்படுகிறது.

மழை நீர் தேங்கியதன் காரணமாக, கேகே நகர், ராஜமன்னார் சாலை தியாகராய நகர் வளசரவாக்கத்தில் சில சாலைகள் உள்ளிட்ட சாலைகளில் நேற்று போக்குவரத்து தடை செய்யப்பட்டது. வாகன ஓட்டிகள் மாற்று பாதையில் திருப்பிவிடப்பட்டன.6ம் தேதி விடிய, விடிய, கொட்டி தீர்த்த கன மழையின் காரணமாக, இன்னும் சென்னைவாசிகள் அந்த துயரத்திலிருந்து மீளவில்லை என்று சொல்லப்படுகிறது. இந்த சூழ்நிலையில், இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்து இருக்கிறது சென்னைவாசிகளின் நிம்மதியை குலைக்கும் செய்தியாக இருக்கிறது.

கனமழை அறிவிப்பை அடுத்து 3 நாட்களுக்கு தேவையான மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறிகள் அறிவிக்கப்படாத மின்தடை சமாளிப்பதற்கும் மெழுகுவர்த்திகள் உள்ளிட்ட பொருட்களை அனேக மக்கள் வாங்கி வைத்திருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.