சசிகலாவுடன் ஒன்றிணையும் ஓபிஎஸ்? ஜெயலலிதாவின் நினைவு நாளில் பலே திட்டம்!

0
110

ஜெயலலிதாவின் நினைவு நாளை முன்னிட்டு சென்னையில் நடத்தப்படும் அமைதி பேரணி நிகழ்வில் பன்னீர்செல்வத்துடன் ஒன்றிணைந்து பங்கேற்பது தொடர்பாக தன்னுடைய ஆதரவாளர்களுடன் சசிகலா நேற்று ஆலோசனை நடத்தியதாக சொல்லப்படுகிறது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6வது நினைவு நாள் டிசம்பர் மாதம் 5ஆம் தேதி தமிழக முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. சென்னை மெரினா கடற்கரையில் இருக்கின்ற அவருடைய நினைவிடத்தில் கடந்த வருடம் நினைவு தினத்தன்று எடப்பாடி பழனிச்சாமியும், பன்னீர்செல்வமும் ஒன்றிணைந்து மரியாதை செலுத்தினர்.

ஆனால் அதன் பிறகு அதிமுகவில் ஒற்றை தலைமை என்ற கோரிக்கையை முன்வைத்து ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக, பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகிறார்கள். ஆகவே தனி அணியாக வந்து மரியாதை செலுத்த வேண்டிய சூழ்நிலை இருவருக்கும் ஏற்பட்டிருக்கிறது.

இருந்தாலும் பிரிந்து சென்றவர்கள் எல்லோரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று பன்னீர்செல்வம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். வலியுறுத்தலுக்கு பின்னால் சசிகலாவின் வருகை இருக்கலாம் என்பதை புரிந்து கொண்ட எடப்பாடி பழனிச்சாமி, அவருடைய கருத்துக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

ஆனால் பன்னீர்செல்வம் தெரிவிக்கும் அதே கருத்தை தான் சசிகலா முன்மொழிந்து வருகிறார். ஆகவே பன்னீர்செல்வம், சசிகலா உள்ளிட்டோர் ஒரே நேர்கோட்டில் பயணம் செய்து வருவதால் இருவரும் ஒன்றிணைந்து செயல்படலாம் என்று சசிகலாவிடம் அவருடைய ஆதரவாளர்கள் தெரிவித்து வருகிறார்களாம்.

ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெறும் போது பன்னீர்செல்வத்துடன் ஒன்றிணையலாம் என்றும் தெரிவித்து வருகிறார்கள். இது குறித்து சென்னை டி நகர் வீட்டில் தன்னுடைய ஆதரவாளர்களுடன் சசிகலா என்று ஆலோசனை நடத்தியதாக சொல்லப்படுகிறது.