ஊரடங்கு நாட்களில் இவர்களுக்கு மட்டும் அனுமதி! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!!

0
83

ஊரடங்கு நாட்களில் இவர்களுக்கு மட்டும் அனுமதி! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!!

கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று நாட்டில் வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக நாட்டில் பல்வேறு  மாநிலங்கள் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் விதித்து, இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு என அறிவித்து வருகின்றன.

அந்த வகையில் தமிழகத்திலும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து அவற்றைக் கட்டுப்படுத்துவது குறித்தும், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும்  மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்றைய தினம் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு தமிழகத்தில் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் இன்று முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், முழு ஊரடங்கு நாட்களில் நடைபெறும் போட்டித் தேர்வுகள் மற்றும் நேர்முகத் தேர்வுகளுக்கு செல்லும் தேர்வர்களுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்

கொரோனா பரவலை தடுப்பதற்கான முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட ஞாயிற்றுக்கிழமையில் மத்திய மற்றும் மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம்  நடத்தும் தேர்வுகள், மற்ற போட்டித் தேர்வுகள், நிறுவனங்களில் நடைபெறும் வேலைவாய்ப்புக்கான நேர்முகத் தேர்வுகள் ஆகியவற்றில் பங்கேற்க செல்லும் இளைஞர்கள் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு அல்லது நிறுவனங்களின் அழைப்பு கடிதம் ஆகியவற்றை காண்பித்து தங்களது பயணங்களை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது.

இதுபோன்ற முழு ஊரடங்கு நாட்களில் நடைபெறும் போட்டித் தேர்வுகள் மற்றும் நேர்முகத் தேர்வுகளுக்கு செல்லும் போது அவர்களுக்கு காவல்துறையினர் அனுமதி வழங்கி முழு ஒத்துழைப்பு அளிப்பார்கள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

author avatar
Parthipan K