இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு அதிகரிப்பு! இரவு நேர ஊரடங்கை அமல்படுத்திய மாநிலங்கள்!

0
134

இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு அதிகரிப்பு! இரவு நேர ஊரடங்கை அமல்படுத்திய மாநிலங்கள்!

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கொரோனா தொற்று குறைந்ததன் காரணமாக படிப்படியாக ஊரடங்கு நீக்கப்பட்ட நிலையில் தற்போது ஒமிக்ரான் தொற்றானது நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது.

தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனாவின் உருமாறிய புதிய வகை வைரஸான ஒமிக்ரான் வைரஸ் தற்போது உலகம் முழுவதும் சுமார் 90க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளதாக கூறப்படும் நிலையில், தற்போது இந்த ஒமிக்ரன் வைரஸ் இந்தியாவிலும் நுழைந்து பல மாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனால் இந்தியாவில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 400ஆக உயர்ந்துள்ளது.

நாட்டில் ஒமிக்ரான் தொற்று அதிகரித்து வரும் இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அதைக் கட்டுப்படுத்துவது குறித்து அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு கடிதம் ஒன்றை எழுதி இருந்தது. அந்த கடிதத்தில் அந்தந்த மாநிலங்கள் மற்றும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள மக்கள் தொகையை பொறுத்தும், ஒமிக்ரான் தொற்று பரவலை பொறுத்தும் அந்தந்த மாநிலங்கள் மற்றும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்தும், ஊரடங்கை அமல்படுத்துவது குறித்தும் முடிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நாட்டில் பல்வேறு மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கை அறிவித்தும், கட்டுப்பாடுகள் விதித்தும் வருகின்றன. அந்த வகையில் ஏற்கனவே மத்திய பிரதேசத்தில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தற்போது குஜராத்திலும் முக்கிய நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து ஹரியானாவில் இரவு நேரத்தில் மக்கள் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்ட்ராவில் இரவு 9 மணி முதல் காலை 6 வரை 5 பேருக்கு மேல் யாரும் கூட கூடாது என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்த வரை ஒமிக்ரான் தொற்றின் பரவல் 10% நெருங்குவதை பொறுத்து ஊரடங்கை அமல்படுதுவது குறித்து முடிவு செய்யப்படும் என நேற்றைய தினம் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

author avatar
Parthipan K