வசூல் செய்த பணத்தை கொடுக்காத அதிகாரி சஸ்பெண்ட்! வெளியான அதிர்ச்சி வாக்குமூலம்

0
99

வசூல் செய்த பணத்தை கொடுக்காத அதிகாரி சஸ்பெண்ட்! வெளியான அதிர்ச்சி வாக்குமூலம்

வசூல் செய்த லஞ்ச பணத்தை கொடுக்காததால், ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டதாக திருச்சி மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரி கொடுத்துள்ள வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

திருச்சி மாவட்டம், வடக்கு காட்டூரைச் சேர்ந்தவர் சரவணகுமார், 55; மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர். இவர், தன் காரில் பிராட்டியூரைச் சேர்ந்த டிரைவர் மணி, 57 என்பவருடன், மார்ச் 30ம் தேதி திருச்சியில் இருந்து சென்னைக்கு 38.75 லட்சம் லஞ்ச பணத்தை எடுத்துச் சென்றார்.

 

தகவலறிந்த, விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு ஏ.டி.எஸ்.பி., தேவநாதன் தலைமையிலான போலீசார், சரவணகுமாரை மடக்கி, பணத்தை பறிமுதல் செய்தனர்.விசாரணையில், சரவணகுமார் கொடுத்துள்ள வாக்குமூலம்:திருச்சி மாவட்டத்தில், ஆதிதிராவிடர் நலத்துறை மாணவர் விடுதிகளுக்கு சமையலர் பணி நியமனம் செய்தேன்.

 

சென்னை ஆதிதிராவிடர் நல இயக்குனர் அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளராக பணிபுரிபவர் கலைமோகன். இவரது அறிவுரையின்படி, டிரைவர் மணி மற்றும் திருச்சி சுப்ரமணியபுரம் கல்லுாரி மாணவர் விடுதி காப்பாளர் செந்தில் ஆகியோர் உதவியுடன், பணி நியமனம் பெற்ற சமையலர்களிடம் இருந்து லஞ்ச பணம் வசூலித்தேன்.

 

வாங்கிய பணத்தை உடனடியாக கலைமோகனிடம் கொடுக்காதது தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையில், மார்ச் 25ம் தேதி, ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டேன். சஸ்பெண்டை சரி செய்ய வேண்டும் என்றால், உடனடியாக லஞ்ச பணத்தைக் கொண்டு வந்து கொடுக்கும்படி கலைமோகன், டிரைவர் மணியிடம் தெரிவித்தார்.

 

இதையடுத்து, லஞ்ச பணத்துடன் என் சொந்த பணத்தையும் சேர்த்து, 38.75 லட்சம் ரூபாயை கலைமோகனிடம் கொடுக்க எடுத்துச் சென்றபோது பிடிபட்டேன்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

லஞ்ச பணம் கொடுக்காத பிரச்னையில், ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டதாக ஆதிதிராவிடர் நல மாவட்ட அதிகாரி கொடுத்துள்ள வாக்குமூலம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.