இதைவிட மோசமாக யாரும் துரோகம் செய்ய முடியாது! மத்திய அரசு மீது ராமதாஸ் குற்றசாட்டு

0
79
PMK Leader Dr Ramadoss Issues Notice to DMK RS Bharathi-News4 Tamil Latest Political News in Tamil
PMK Leader Dr Ramadoss Issues Notice to DMK RS Bharathi-News4 Tamil Latest Political News in Tamil

மத்திய அரசின் சார்பாக செயல்படும் பொதுத்துறை நிறுவனங்களில் இட ஒதுக்கீடு சரியாக பின்பற்றப்படவில்லை என்றும்,மத்திய அரசு, பொதுத்துறை நிறுவன பணிகளில் ஓபிசி இடஒதுக்கீடு பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் முக்கியமானதான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தின் (ஓ.என்.ஜி.சி) பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் நிலையிலான பணி நியமனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு முற்றிலுமாக கடைபிடிக்கப்படவில்லை என்று வெளியாகி உள்ள செய்திகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன. மத்திய அரசு பணி நியமனங்களில் ஓபிசிகளுக்கு தொடர்ந்து துரோகம் இழைக்கப்பட்டு வருகிறது என்ற குற்றச்சாட்டை இந்த செய்தி உறுதி செய்துள்ளது.

இந்தியாவில் மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு 1993-ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. அப்போதிலிருந்தே ஓ.என்.ஜி.சி நிறுவனத்தில் ஓபிசி இட ஒதுக்கீடு முறையாக செயல்படுத்தப்படவில்லை என்பதை தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையமே உறுதி செய்திருக்கிறது. 1993-ஆம் ஆண்டு ஓ.என்.ஜி.சி நிறுவனத்தில் 286 பேர் பணி நியமனம் செய்யப்பட்டனர். அவர்களில் 77 பணியிடங்கள் பிற பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும்; ஆனால், 11 பேர் மட்டுமே பிற்படுத்தப்பட்ட வகுப்பிலிருந்து நியமிக்கப் பட்டனர். 1994-ஆம் ஆண்டு நிரப்பப்பட்ட 99 பணியிடங்களில் 26 ஓபிசிகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய நிலையில், 9 பேருக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டது. 2016-ஆம் ஆண்டு வரை 23 ஆண்டுகளாகவே இந்த துரோகம் நிகழ்ந்திருக்கிறது. அதுமட்டுமின்றி, 2018-ஆம் ஆண்டுக்கு முன்னும், பின்னும் தொழில் பழகுனர்களை தேர்வு செய்வதிலும் ஓபிசி இட ஒதுக்கீட்டு விதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன.

ஒருமுறை ஆள்தேர்வு நடத்தும் போது, போதிய எண்ணிக்கையில் ஓபிசி வகுப்பினர் கிடைக்கவில்லை என்றால், நிரப்பப்படாத இடங்களை பின்னடைவு பணியிடங்களாக அறிவித்து அடுத்த ஆள்தேர்வில் சேர்த்து நிரப்ப வேண்டும். ஆனால், ஒருமுறை கூட ஓ.என்.ஜி.சி அவ்வாறு செய்யவில்லை. மாறாக, பின்னடைவுப் பணியிடங்களைக் கணக்கில் காட்டாமல் ஏமாற்றி வந்திருக்கிறது. இதைவிட மோசமாக சமூகநீதிக்கு யாரும் துரோகம் செய்ய முடியாது. ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் இந்த துரோகத்தைக் கண்டுபிடித்த தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், முதற்கட்ட விசாரணையில் இந்தக் குற்றச்சாட்டுகள் உண்மை என்பதை உறுதி செய்திருக்கிறது. அடுத்தக்கட்ட விசாரணைக்காக கடந்த 14-ஆம் தேதி ஓ.என்.ஜி.சி அதிகாரிகளை அழைத்த நிலையில், அவர்கள் விசாரணைக்கு வராமல் தவிர்த்திருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து அந்த நிறுவனத்திற்கு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அறிவிக்கை அனுப்பியிருக்கிறது.

மத்திய அரசு பணிகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டு 27 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், இன்று வரை பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட அளவுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை. மத்திய அரசு பணிகளில் ஓபிசிகளின் பிரதிநிதித்துவம் 20 விழுக்காட்டுக்கும் கூடுதலாக இருப்பதாக மத்திய அரசு கூறினாலும் கூட, உண்மையான ஓபிசி பிரதிநிதித்துவம் இன்னும் 10 விழுக்காட்டைக் கூட தாண்டவில்லை. இதற்குக் காரணம் ஓ.என்.ஜி.சி போன்று மத்திய அரசுத் துறைகளும், பொதுத்துறை நிறுவனங்களும் 27% இட ஒதுக்கீடு வழங்காமல் ஏமாற்றுவது தான். இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப் பட்டு 27 ஆண்டுகளாகி விட்ட நிலையில், ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு துறையில் ஓபிசிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் எத்தனை? நிரப்பப்பட்ட இடங்கள் எத்தனை? மீதமுள்ள இடங்கள் நிரப்பப்படாததற்கு காரணம் என்ன? ஒவ்வொரு பணி நிலையிலும், ஓபிசிகளின் பிரதிநிதித்துவம் எவ்வளவு? என்பது குறித்த விவரங்களை வெளியிடுவது தான் சமூகநீதிக்கு அழகு ஆகும். ஆனால், ஓர் ஆண்டு கூட இந்த விவரங்களை மத்திய அரசு வெளியிட்டதில்லை.

மத்திய அரசு பணிகளில் ஓபிசிகளின் பிரதிநிதித்துவம் குறித்த விவரங்களை மத்திய அரசு வெளியிட மறுப்பதற்கு காரணம்… ஓபிசிகளுக்கு இழைக்கப்படும் துரோகம் வெளிப்பட்டுவிடக் கூடாது என்பது தான். ஓ.என்.ஜி.சி நிறுவனம் மகாரத்னா நிறுவனம் ஆகும். அந்நிறுவனத்தில் அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ.40 லட்சம் வரை ஊதியம் வழங்கப்படுகிறது. அங்கு மொத்தம் 35 ஆயிரத்திற்கும் கூடுதலான பணி இடங்கள் உள்ளன. இது போன்ற நிறுவனங்களால் தான் இட ஒதுக்கீட்டை செம்மையாக செயல்படுத்தி சமூகநீதியை பாதுகாக்க முடியும். ஆனால், 27% இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மட்டும் சுமார் 10,000 பிற்படுத்தப்பட்டோருக்கு வேலைவாய்ப்பு வழங்கியிருக்க வேண்டிய ஓ.என்.ஜி.சி நிறுவனம், மொத்தமாகவே 3 ஆயிரத்துக்கும் குறைவான ஓ.பி.சி.களுக்கு மட்டும் தான் வேலை வழங்கியுள்ளது. இதுவா சமூகநீதி?

மத்திய அரசுப் பணிகளில் ஓபிசிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் நிரப்பப்படாததற்கு காரணம், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் திறமையானவர்கள் இல்லை என்பதில்லை. மாறாக, கிரீமிலேயர் என்ற சமூக அநீதி ஆயுதத்தைப் பயன்படுத்தி திறமையானவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பது தான். 27% இடஒதுக்கீட்டை ஓபிசி மக்கள் முழுமையாக அனுபவிக்க வேண்டுமென்றால், முதல் நடவடிக்கையாக கிரீமிலேயர் முறை நீக்கப்பட வேண்டும்; அதை வலியுறுத்தி சமூகநீதி அமைப்புகள் போராட வேண்டும்.

ஓ.என்.ஜி.சி நிறுவன வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இழைக்கப்பட்ட துரோகம் மட்டும் தான் இப்போது வெளியாகியிருக்கிறது. அனைத்து துறைகளில் ஓபிசிக்கள் எந்த அளவுக்கு வஞ்சிக்கப்பட்டுள்ளனர் என்பதை அறிய, மத்திய அரசுத்துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனப்பணிகளில் ஒவ்வொரு நிலையிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பிரதிநிதித்துவம் எவ்வளவு என்பது குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். அவை 27 விழுக்காட்டை விட எந்த அளவு குறைவாக உள்ளனவோ, அவற்றை பின்னடைவு பணியிடங்களாக அறிவித்து சிறப்பு ஆள்தேர்வு மூலம் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைக் கொண்டு அந்த இடங்களை நிரப்ப மத்திய அரசு முன்வர வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

author avatar
Ammasi Manickam