எதற்கும் உதவாத கவர்னர் உரை ஓபிஎஸ் அதிரடி!

0
64

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது, இந்த சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்ற அதிமுகவின் சட்டசபை உறுப்பினர்கள் திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தார்கள்.

அப்போது பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்ததாவது, தமிழக மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு ஆளுநர் உரையில் ஏதாவது உள்ளதா? என்று நானும் ஆராய்ந்து பார்த்தேன் ஆனால் அதற்கான விடை எதுவும் கிடைக்கவில்லை. தடுப்பூசி செலுத்த ஆரம்பிக்கப்பட்ட சமயத்தில் தடுப்பூசிக்கு எதிராக திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் விஷம பிரச்சாரம் செய்ததன் விளைவாக பொதுமக்களிடையே தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் தயக்கம் ஏற்பட்டது, இதையும் மறைத்து திமுக சாதனை செய்தது போல ஆளுநர் உரையில் காட்டப்பட்டிருக்கிறது, இது நகைப்புக்குரியதாக இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.

அதிமுக ஆட்சிக் காலத்தில் தடுப்பு ஊசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததற்கு காரணம் திமுகவும் அந்த கட்சியின் இரட்டை வேடமும் தான் என்று தெரிவித்திருக்கிறார் ஓபிஎஸ். அதேநேரம் ஆளுநர் உரையில் நீட் உள்ளிட்ட தேர்வுகள் தேவையற்றவை என்று இந்த அரசின் நிலைப்பாட்டை தொடர்ந்து வலியுறுத்துவோம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அடுத்த ஆளுநர் உரையில் இதுவும் இடம்பெறாது, ஆக மொத்தத்தில் நீட் தேர்வு ரத்து என்பது ஒரு ஏமாற்று வேலை என தற்சமயம் தெளிவாகத் தெரிந்து விட்டது. திமுக ஆட்சிக்கு வருவதற்கு அடித்தளமாக இருந்த வாக்குறுதிகள் தொடர்பாக ஆளுநர் உரையில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.இது பொது மக்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

ஆளுநர் உரையில் வரவேற்கத் தகுந்த ஒரே ஒரு அம்சம் என்னவென்றால் சென்ற ஆளுநர் உரையில் ஒன்றிய என்ற வார்த்தை 28 இடங்களில் குறிப்பிடப்பட்டு இருந்தது. அந்த வார்த்தை தற்போதைய ஆளுநர் உரையில் ஒரே ஒரு இடத்தில்தான் இடம்பெற்றிருக்கிறது. அடுத்த ஆளுநர் உரையில் இந்த வார்த்தை இடம் பெறாது என்று நம்புவோம்.

அதேபோல ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை சென்ற முறையை போல கவர்னர் உரையில் இடம்பெறவில்லை. ஆனாலும் அந்த வார்த்தையை சொல்லித்தான் கவர்னர் தன்னுடைய உரையை முடித்து இருக்கிறார். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் வருங்காலத்தை தொடர்பான தொலைநோக்கு பார்வை இல்லாத, எதிர்காலத் தலைமுறையை பற்றி சிந்திக்க எதற்கும் உதவாத கதைகளின் தொகுப்பு தான் இந்த ஆளுநர் உரை என்று குற்றம் சுமத்தியிருக்கிறார் ஓபிஎஸ்.