இனி செல்போன் பயன்படுத்த தடை! மீறினால் ஒழுங்கு நடவடிக்கை!!

0
70

இனி செல்போன் பயன்படுத்த தடை! மீறினால் ஒழுங்கு நடவடிக்கை!!

விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை தொடர்ந்து அதனை கட்டுப்படுத்த வாகன ஓட்டிகள் சாலையில் செல்லும்போது செல்போன் பயன்படுத்தக் கூடாது என்கிற சட்டம் ஏற்கனவே அமலில் உள்ளது. இதையும் மீறி பலர் செல்போன் பேசிக்கொண்டே சாலையில் வாகனத்தை இயக்கி செல்கின்றனர். இதனால் அடிக்கடி விபத்துகள் நேர்கின்றன.

தமிழகத்தில், சமீபகாலமாக விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது குறித்து ஆய்வு செய்யும் போது, ஓட்டுனர்கள் பணியின் போது செல்போன் பயன்படுத்துவதும் மற்றும் நடத்துனர்கள் பகலில் பணியில் முன் இருக்கையில் ஓட்டுநருடன் உரையாடிக் கொண்டு அமர்ந்து செல்வதாலேயே ஓட்டுனருக்கு கவனக்குறைவு ஏற்பட்டு விபத்து நேரிட காரணமாக அமைவதாக சொல்லப்படுகிறது.

எனவே, தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையின் கீழ் இயக்கப்படும் பேருந்துகள் மற்றும் பணியாளர்கள் நலனில் போக்குவரத்துறை பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இது தொடர்பாக போக்குவரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:-

ஓட்டுநர்கள் பணியின் போது செல்போன் பயன்படுத்துவதாலும் மற்றும் நடத்துநர்கள் முன் இருக்கையில் அமர்ந்து கொண்டு உரையாடுவதாலும் அதிக விபத்து ஏற்படுகிறது. எனவே, ஓட்டுநர்கள் பணியின் போது செல்போன் வைத்திருக்கக் கூடாது. அதனை நடத்துனரிடம் ஒப்படைத்துவிட்டு பணி முடிவடைந்த பின்னர் பெற்றுகொள்ள வேண்டும்.

அதுபோல், நடத்துநர்களும் பகல் நேரங்களில் முன் இருக்கையில் அமராமல் பின்புறம் கடைசி இருக்கையில் அமர்ந்து இரண்டு படிகளையும் கண்காணிக்க வேண்டும். படிக்கட்டுகளில் யாரேனும் பயணம் செய்கிறார்களா என்பதனையும் மற்றும் பயணிகள் ஏறும்போதும், இறங்கும்போதும் இரண்டு படிக்கட்டுகளையும் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் மீறி பணி நேரத்தில் ஓட்டுனர் செல்போன் வைத்திருப்பது கண்டறியப்பட்டாலோ, நடத்துனர் பகலில் முன் இருக்கையில் அமர்ந்து இருப்பது கண்டறியப்பட்டாலோ அவர்கள் மீது சட்ட பிரிவின் மூலம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

author avatar
Parthipan K