இப்போதைக்கு கூடுதல் தளர்வுகள் வேண்டாம்! எச்சரிக்கும் சுகாதாரத்துறை!!

0
94

இப்போதைக்கு கூடுதல் தளர்வுகள் வேண்டாம்! எச்சரிக்கும் சுகாதாரத்துறை!!

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கான தேர்தல் ஏற்கனவே நடந்து முடிந்துவிட்ட நிலையில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளுக்கு மட்டும் இப்போது தேர்தல் நடக்கவிருக்கிறது. கடந்த புதன் கிழமையன்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் பிப்ரவரி 19 ஆம் தேதி நகர்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.

கொரோனா பரவல் காரணமாக, மாநில தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க செல்கையில் ஒரு வேட்பாளர் மூன்று பேருடன் மட்டுமே வாக்கு சேகரிக்க செல்ல  வேண்டும். மேலும், அரங்கத்தில் பேச வேண்டும் என்றால் 100 பேர் மட்டுமே அமர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கொரோனா கட்டுப்பாடு வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருவதால் பிரசார கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வுகளை அமல்படுத்தலாமா? என்பது குறித்து ஆலோசிக்க மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனை அழைத்து ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ள கொரோனா பாதிப்பு குறித்து விரிவாக பேசப்பட்டது. கவுன்சிலர் பதவிக்கு நிற்பவர்கள் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க இருப்பதால் இப்போது உள்ள கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வுகள் மேற்கொண்டால் கூட்டம் அதிகமாகி கொரோனா பரவ வழிவகுத்துவிடும். எனவே இப்போது உள்ள கட்டுப்பாடுகளை நீடிப்பதே சரியாகும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

மேலும், தேர்தல் முடியும் வரை இப்போதுள்ள கட்டுப்பாடுகள் இருந்தால்தான் கொரோனா அதிகம் பரவாது. இல்லாவிட்டால் நிலைமை மோசமாகிவிடும். எனவே இப்போதைக்கு கொரோனா கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்க வாய்ப்பு இல்லை என்றே சொல்லப்படுகிறது.