தமிழகத்தில் கூட்டணி ஆட்சி நடைபெறுமா? மௌனம் கலைத்த எடப்பாடியார்!

0
71

தமிழ்நாட்டிலே கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு கிடையாது என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக தெரிவித்து இருக்கின்றார்.

அதிமுகவின் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் பங்கேற்று கொள்வதற்காக நேற்று சென்னையில் இருந்து கோயம்புத்தூர் புறப்பட்டுச் சென்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோயம்புத்தூர் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

டிசம்பர் மாதம் 27ஆம் தேதி சென்னை ஒய். எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்ற அதிமுகவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், பேசிய துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடம் கிடையாது எடப்பாடி பழனிச்சாமி தான் எங்கள் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் அதிமுக தலைமையில் தான் கூட்டணி என்று தெரிவித்தார்.

இதற்கு அதிமுக தொண்டர்களும், நிர்வாகிகளும், வரவேற்பு தெரிவித்திருக்கின்றனர். நேற்றைய தினம் கோயமுத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பாஜக மற்றும் அதிமுகவின் கூட்டணி குறித்து கேள்வி எழுப்பிய போது, நான் முன்னரே தெரிவித்துவிட்டேன் கூட்டணி தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. நாடாளுமன்ற தேர்தலில் அமைக்கப்பட்ட கூட்டணி தொடர்கின்றது. எங்களுடைய தலைமையில் கூட்டணி அமைக்கப்படும் நாங்கள் தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பிக்க வேண்டி இருப்பதால் முதலமைச்சர் வேட்பாளரை அறிவித்து இருக்கிறார்கள் என்று பதில் கூறினார்.

தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமைக்கப்படும் என்று சொல்லப்படுவது பற்றிய கேள்விக்கு பதில் தெரிவித்த முதல்வர், தமிழ்நாட்டை பொறுத்தவரையில் கூட்டணி அமைச்சரவை என்பதை மக்கள் ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இல்லை. இதுவே அதிமுகவின் நிலைப்பாடு என தெரிவித்து செய்தியாளர் சந்திப்பை முடித்துக் கொண்டார்.

எதிர்வரும் ஆட்சி தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி என்று பாஜகவினர் தொடர்ந்து தெரிவித்து வரும் நிலையில், டிசம்பர் மாதம் 27ஆம் தேதி கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடம் கிடையாது என்ற கே.பி. முனுசாமி தெரிவித்த கருத்தை டிசம்பர் மாதம் 28ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உறுதிப்படுத்தியிருக்கிறார்.

கே.பி. முனுசாமி அவர்கள் தெரிவித்த கருத்திற்கு அதிமுகவிற்கும் மிகுந்த வரவேற்பு கிடைத்த நிலையில், முதலமைச்சர் இதை மறுபடியும் தெரிவித்திருக்கின்றார் இதன் மூலமாக அமைச்சரவையில் இடம் என்ற பாமக, மற்றும் பாஜக வின் நிபந்தனைகளை ஆரம்பத்திலேயே மறுத்திருக்கிறார்கள் ஆளும் தரப்பினர்.