அடுத்தடுத்து கசியும் வினாத்தாள்கள்!

0
70

அடுத்தடுத்து கசியும் வினாத்தாள்கள்!

நாட்டில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை பரவ தொடங்கியது. இதன் காரணமாக தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நேரடி வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டது. மேலும், 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி மாதத்தில் நடைபெறுவதாக இருந்த திருப்புதல் தேர்வும் ஒத்திவைக்கப்பட்டது.

கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்ததை அடுத்து இந்த மாதம் (பிப்ரவரி) 1-ந் தேதி முதல் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இந்தாண்டு பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என்று தெரிவித்திருந்தார். இதன் காரணமாக, பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு விரைவில் பாடங்களை நடத்தி முடிக்க ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து, 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு ஜனவரியில் நடைபெறுவதாக இருந்து ஒத்திவைக்கப்பட்ட திருப்புதல் தேர்வு கடந்த 9-ந் தேதி தொடங்கியது. இந்த நிலையில், திருவண்ணாமலையில் நேற்று (திங்கட்கிழமை) 10-ஆம் வகுப்புக்கான அறிவியல் தேர்வு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புக்கான கணிதத் தேர்வின் வினாத்தாள்கள் வெளியானது. இதனால் கல்வியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

வினாத்தாள் வெளியானது குறித்து நடத்திய முதல்கட்ட விசாரணையில், வந்தவாசி அருகே செயல்பட்டு வரும் ஒரு தனியார் பள்ளி மூலம் வினாத்தாள் வெளியானதாக தெரிய வந்தது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து காவல் நிலையத்திலும் புகார் செய்யப்பட்டுள்ளது. எனவே, போலீசாரும் இதுதொடர்பாக விசாரணை செய்து வருகின்றனர்.

இதனிடையே, வினாத்தாள் வெளியானது குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று நடைபெற இருந்த சமூக அறிவியல் தேர்வு மற்றும் நாளை மறுநாள் (பிப்ரவரி 17-ந் தேதி) நடைபெற உள்ள ஆங்கிலப் பாடத்தின் வினாத்தாள்களும் முன்கூட்டியே வெளியாகி உள்ளன. இதனால் தேர்வுத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

author avatar
Parthipan K