தமிழகத்தின் அடுத்த டிஜிபி யார்.? மத்திய அரசுடன் போராடும் எடப்பாடி பழனிசாமி

0
85

தமிழகத்தின் அடுத்த டிஜிபி யார்.? மத்திய அரசுடன் போராடும் எடப்பாடி பழனிசாமி

அடுத்து தமிழகத்திற்கு புதிய டிஜிபியாக யாரை நியமிப்பது என்பதில் தமிழக அரசு மற்றும் மத்திய அரசுக்கும் இடையே மீண்டும் கருத்து வேறுபாடு உருவாகி வரும் நிலையில், ஜே.கே.திரிபாதி நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தற்போது டி.கே.ராஜேந்திரன் தமிழக டிஜிபியாக பதவி வகித்து வருகிறார். இவரது பதவிக்காலம் எப்போதோ முடிவடைந்துவிட்டது. பதவிக்காலம் முடிந்தாலும் பணி நீட்டிப்பு பெற்று தொடர்ந்து டிஜிபியாக ராஜேந்திரன் நீடித்து வருகிறார். இவரது பணிக்காலம் முடிவடையும் சமயத்தில் புதிய டிஜிபி யார் என்கிற கேள்வி எழுந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பிடிவாதமாக ராஜேந்திரன் பதவிக்காலத்தை நீட்டிக்கச் செய்து அவரையே டிஜிபியாக தொடர வைத்தது. அந்த சமயத்தில் மத்திய பணியாளர் தேர்வாணையத்திற்கும் தமிழக அரசுக்கும் இடையே கடும் மோதல் மூண்டது. இறுதியில் எடப்பாடி தனது டெல்லி தொடர்புகள் மூலமாக ராஜேந்திரனை டிஜிபி பதவியில் தொடர வைத்தார்.

ஆனால், இந்த முறை அப்படி ஏதும் செய்ய முடியாது. மேலும் குட்கா உள்ளிட்ட சில விவகாரங்களில் ராஜேந்திரன் பெயர் அடிபட்டு வருகிறது. இதற்காக அவரது வீட்டிலேயே சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். எனவே தேவையில்லாத சர்ச்சையை தவிர்க்க அடுத்து புதிய டிஜிபியை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த மாதம் 30-ம் தேதியுடன் ராஜேந்திரன் பதவிக் காலம் நிறைவடைகிறது. 

எனவே அவருடைய பதவிக்காலம் முடிவடைவதற்குள் புதிய டிஜிபியை எடப்பாடி பழனிசாமி அரசு நியமிக்க வேண்டும். அதன்படி தற்போது அடுத்த டிஜிபியாகும தகுதியுடன் ஜாபர் சேட் மற்றும் ஜே.கே. திரிபாதி உள்ளிட்ட 10 பெயர்கள் தான் முன்னிலையில் உள்ளன. இவர்களில் ஜாபர் சேட்டுக்கு எடப்பாடி பழனிசாமியின் ஆதரவும், ஜே.கே. திரிபாதிக்கு மத்திய அரசு ஆதரவு உள்ளது. ஏற்கனவே பல்வேறு புகார்களுக்கு ஆளான ஜாபர் சேட்டை டிஜிபியாக நியமிக்க மத்திய பணியாளர் தேர்வாணையம் தயக்கம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் ஜே.கே.திரிபாதி தான் தமிழகத்தின் அடுத்த டிஜிபியாக வேண்டும் என்று மத்திய பணியாளர் தேர்வாணையம் தொடர்ந்து பிடிவாதம் காட்டி வருகிறது. 

இந்நிலையில், தமிழகத்தின் அடுத்த டிஜிபியாக மத்திய அரசின் ஆதரவு உள்ள ஜே.கே.திரிபாதி நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திரிபாதி சென்னை காவல்துறை ஆணையராகவும், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாகவும் ஏற்கனவே பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

author avatar
Parthipan K