தங்க நகைகளை விற்க இனி புதிய கட்டுப்பாடு! ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமல் 

0
304
Gold Purchase
#image_title

தங்க நகைகளை விற்க இனி புதிய கட்டுப்பாடு! ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமல்

தங்க நகைகளை விற்க வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் கடைகளுக்கு புதிய கட்டுப்பாடு அமல்படுத்தப்படும் என இந்திய தர நிர்ணைய சென்னை மண்டல கிளையின் தலைவர் பவானி தெரிவித்துள்ளார்.

சென்னை:

தங்க நகைகளுக்கு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் கட்டாய HUID என்ற 6 இலக்க எண்ணெழுத்து அடிப்படையிலான ஹால் மார்க்கிங் முறை செயல்படுத்தப்பட உள்ளது. இந்த முறையினால் நகையை ஸ்கேன் செய்து பார்க்கும் பொழுது அதனுடைய தரம் மற்றும் அதனை செய்தவரின் விவரம் முழுவதும் அறிய முடியும்.

நகை வாங்குபவர்களுக்கு அவர்களுக்குரிய பணத்திற்கான பொருளை வாங்குகிறார்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் இந்த முறை அமல்படுத்தப்பட்டுள்ளது என இந்திய தர நிர்ணைய சென்னை மண்டல கிளையின் தலைவர் பவானி தெரிவித்தார்.

மேலும் இதுகுறித்து இந்திய தர நிர்ணய சென்னை மண்டல கிளையின் தலைவர் பவானி கூறும்போது, “இந்திய தர நிர்ணய அமைவனம் (பி.ஐ.எஸ் – BIS) என்பது இந்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு சட்டரீதியான அமைப்பாகும்.

பொருள்களுக்கான தர உரிமம் (ஐஎஸ்ஐ மார்க்), மேலாண்மை திட்ட சான்றிதழ், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள்,கலைப் பொருள்களுக்கான ஹால்மார்க் உரிமம் மற்றும் ஆய்வகச் சேவைகளின் நலன் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது.

ஹால்மார்க்கிங் திட்டத்தின் நோக்கம், கலப்படத்திற்கு எதிராக பொதுமக்களைப் பாதுகாப்பது மற்றும் உற்பத்தியாளர்கள் சட்டப்பூர்வமான தரத்தை பேணுவதைக் கட்டாயப்படுத்துவது ஆகும். தங்க நகைகளில் ஹால்மார்க் என்பது ஒரு தரத்திற்கான அடையாளம். தற்போது, ​​தங்க நகைகளில் ஹால்மார்க்கிங் என்பது BIS அடையாளம், காரட்டில் தங்கத்தின் தூய்மை,நேர்த்தி மற்றும் 6-இலக்க எண்ணெழுத்து HUID குறியீடு ஆகிய 3 அடையாளங்களைக் கொண்டுள்ளது.

HUID – ஹால்மார்க்கிங் பிரத்யேக ஐடி என்பது ஒவ்வொரு தங்க நகையிலும் குறிக்கப்பட்ட தனித்துவமான 6 இலக்க எண்ணெழுத்து குறியீடாகும். தற்போது இந்தியாவில் 288 மாவட்டங்களில் தங்கத்தின் ஹால்மார்க் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 38 மாவட்டங்களில் 26 மாவட்டங்களில் இது கட்டாயம்.

“BIS CARE” செயலியில் உள்ள பயன்பாட்டில் உள்ள VERIFY HUID ஐகானை கிளிக் செய்வதன் மூலம், ஹால்மார்க் செய்யப்பட்ட தங்க நகைகளில் உள்ள HUID-ன் நம்பகத்தன்மையை நுகர்வோர் சரிபார்க்கலாம். வாடிக்கையாளர்கள் தங்களது ஹால்மார்க் செய்யப்பட்ட நகைகளை, தாங்கள் அளித்த பணத்திற்கு, சரியான தரமான நகையை வாங்கி உள்ளார்களா? என்பதைக் கண்டறிய முடியும்.

ஹால்மார்க் 14 காரட் முதல் 22 காரட் வரை தங்க நகைக்கும் அச்சிடப்படுகிறது. ஹால்மார்க்கிங் திட்டம், வாடிக்கையாளர் கொடுக்கப்பட்ட விலையில் தங்கத்தின் சரியான தூய்மையைப் பெறுகிறார் என்ற மூன்றாம் தரப்பு உத்தரவாதத்தையும் திருப்தியையும் வழங்குகிறது. ஹால்மார்க்கிங் – ஒரு நகைக்கடைக்காரரின் திறன், தரத்திற்கான உறுதிப்பாடு மற்றும் தூய்மையில் நிலைத்தன்மையின் உறுதிப்பாட்டிற்கான வலுவான ஆதாரம் ஆகியவற்றின் தெளிவான குறிப்பை வழங்கும்.

இந்திய அரசாங்கத்தின், நுகர்வோர் விவகார அமைச்சகத்தின் உத்தரவின்படி, ஏப்ரல் 1 முதல் BIS பதிவு செய்யப்பட்ட நகைக்கடைகளால் HUID ஹால்மார்க் செய்யப்பட்ட நகைகளை மட்டுமே விற்க வேண்டும். ஏற்கனவே, தங்க நகை வாங்கி வைத்திருந்த கடைக்காரர்களும் தற்போது அதனை மாற்றி உள்ளனர். பிற மாவட்டங்களிலும் ஹால்மார்க் முத்திரை வழங்குவதற்கான சேவை மையங்கள் ஆரம்பிக்கப்பட்ட உடன் அங்கும், HUID ஆறு இலக்க எண் கொண்ட தங்க நகை விற்க வேண்டும்.

இந்தியத் தர நிர்ணய ஆணையம் 19 கோடி தங்க நகைகளுக்கு HUID எண்ணை கொடுத்துள்ளது. அவற்றில் சுமார் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இரண்டு கிராமிற்கு குறைவான தங்க நகைகளுக்கும் 6 இலக்க எண் கொடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களிடம் அதிக அளவில் விழிப்புணர்வு இருப்பதால் கடைக்காரர்களும் தங்க நகைகளை ஹால்மார்க் தரத்தில் விற்று வருகின்றனர்.

இந்திய தர நிர்ணய அமைப்பு சார்பில் தொடர்ந்து கடைகளில் விற்கப்படும் நகைகள் பரிசோதனை செய்யப்படும். அவற்றில் விதிமீறல்கள் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” எனத் தெரிவித்தார்.