தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் புதியதாக கட்டப்படும் பேருந்து நிலையங்கள்! எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?

0
96

தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் புதியதாக கட்டப்படும் பேருந்து நிலையங்கள்! எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?

தமிழ்நாட்டில் பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப பொது போக்குவரத்துகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் பேருந்துகளின் எண்ணிக்கையும் அதிகரித்து காணப்படுகிறது. எனவே அதிக அளவிலான பேருந்துகளை கையாள்வதற்கு பேருந்து நிலையங்கள் தேவைப்படுகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் ரூ.424 கோடி மதிப்பில் புதிதாக 13 இடங்களில் பேருந்து நிலையங்கள் அமைய உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஏற்கனவே, சட்டசபையில் ஆளுநர் ஆற்றிய உரையிலும், நகராட்சி நிர்வாக அமைச்சரின் அறிவிப்பிலும் சில நகரங்களில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கான திட்டம் இடம் பெற்றிருந்தது. அதன்படி, ஒவ்வொரு பேருந்து நிலையத்துக்கும் விரிவான மதிப்பீடு செய்யப்பட்டது. அதற்கு போதுமான நிலம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

எனவே, இந்தப் பணிகளுக்கான விரிவான திட்ட அறிக்கையை நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் தயார் செய்தன. இதுதொடர்பான குழுவின் கூட்டத்தில் அவை வைக்கப்பட்டன. கொள்கை அளவில் 50 சதவீதம் தொகையை அளிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

அதன்படி ஈரோடு, கரூர், கடலூர், காஞ்சீபுரம், திருத்தணி, திருமங்கலம், ராணிப்பேட்டை, திண்டிவனம், திருவண்ணாமலை, மன்னார்குடி, மயிலாடுதுறை, நாமக்கல், சங்கரன்கோவில் ஆகிய 13 நகர்ப்புற உள்ளாட்சிகளில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க ரூ.424.56 கோடி மதிப்பிடப்பட்டுள்ளதாக விரிவான திட்ட அறிக்கையை அந்த உள்ளாட்சி அமைப்புகள் தாக்கல் செய்துள்ளன.

தமிழ்நாடு உட்கட்டமைப்பு வளர்ச்சி நிறுவனம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் நிதியுதவியுடன் புதிய பேருந்து நிலையங்கள் கட்டப்படுகின்றன என்றும், பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளுடன் புதிய பேருந்து நிலையங்கள் அமைய உள்ளதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கும் பணி விரைவில் முடிவடைந்து மக்களின் பயன்பாட்டிற்கு வரும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

author avatar
Parthipan K