முரசொலி விவகாரத்தில் செலக்டிவ் அம்னீஷியாவா ஸ்டாலினுக்கு? விடாமல் துரத்தும் பாமக தலைவர் ஜி.கே.மணி

0
65

முரசொலி விவகாரத்தில் செலக்டிவ் அம்னீஷியாவா ஸ்டாலினுக்கு? விடாமல் துரத்தும் பாமக தலைவர் ஜி.கே.மணி

அசுரன் படத்தை பார்த்துவிட்டு பாராட்டியதோடு விட்டு இருந்தால் இவ்வளவு பெரிய நெருக்கடியை சந்தித்து இருக்க மாட்டார் மு.க.ஸ்டாலின், படத்தை பாடம் என்று சொல்லி இனிமேல் எந்த படத்தை பார்க்காமல் செய்துவிட்டார் பாமக நிறுவனர் இராமதாஸ்,.

அவர் பற்ற வைத்த நெருப்பு இன்று காட்டுத்தீ போல் பரவி தமிழக அரசியலையே புரட்டி எடுத்து வருகிறது, பாமகவும் பாஜகவும் இணைந்து இரட்டை குழல் துப்பாக்கி போல் முரசொலி விவகாரத்தில் வெடித்து வருகிறது,. இதற்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறி வருகின்றனர் திமுகவினர்.,

முரசொலி விவகாரத்தில் உரிய ஆவணத்தை தகுந்த நேரத்தில் வெளியிடுவேன் என்று நேற்று ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கைக்கு பதிலாக
பாமக தலைவர் ஜி.க.மணி வெளியிட்டுள்ள அறிக்கை இதோ!

முரசொலி நிலம் குறித்த அனைத்து ஆவணங்களையும் உரிய அதிகாரம் படைத்த ஆணையத்திடம் ஒப்படைக்கப் போவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கூறியிருக்கிறார். எப்போது, எந்த ஆணையத்திடம் அந்த ஆவணங்களை ஒப்படைக்கப் போகிறார் என்பதை அறிவிக்காவிட்டாலும் கூட, பெயரளவிலாவது முரசொலி நிலம் தொடர்பான ஆவணங்களை வெளியிட முன்வந்திருப்பதை பாட்டாளி மக்கள் கட்சி வரவேற்கிறது.

முரசொலி நிலம் பற்றி விளக்கமளிப்பதற்காக நேற்று வெளியிட்ட அறிக்கையில், திமுகவின் அறைகூவலுக்கு பாட்டாளி மக்கள் கட்சியிடமிருந்து பதில் வரவில்லை என்று கூறியிருக்கிறார். மு.க.ஸ்டாலினின் அறியாமையை நினைத்து பரிதாபம் தான் வருகிறது. முரசொலி நிலம் குறித்து மு.க.ஸ்டாலின் விடுத்த அறிக்கை தொடர்பாக முதலில் அக்டோபர் 20-ஆம் தேதியும், பின்னர் 27-ஆம் தேதியும் நான் விரிவாக பதிலறிக்கை வெளியிட்டேன். அவற்றையெல்லாம் மு.க.ஸ்டாலின் அவர்கள் படிக்கவில்லையா… அல்லது அவருக்கு செலக்டிவ் அம்னீஷியாவா? என்பது தெரியவில்லை. ஒரு விஷயத்தில் பதுங்குவதற்காகவே படிக்கவில்லை என்று கூறுவதும் கூட ஒரு வகை கலை தான். அந்தக் கலையில் தேர்ந்தவர்கள் திமுக தலைமை பீடத்தினர் என்பதை அனைவரும் அறிவர்.

முரசொலி நில சர்ச்சை எழுந்த நாள் முதல் இன்று வரை பாட்டாளி மக்கள் கட்சியும், அதன் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களும் எழுப்பும் வினாக்கள் மிகவும் எளிமையானவை. முரசொலி நிலம் பஞ்சமி நிலம் அல்ல… அது தனியார் பட்டா நிலம் என்றால், அதற்குரிய ஆவணங்களான நிலப்பதிவு பத்திரங்கள், 1924-ஆம் ஆண்டின் யு.டி.ஆர் ஆவணங்கள் எங்கே? அவை மு.க. ஸ்டாலினிடம் உள்ளனவா, இல்லையா? அரசு ஆதிதிராவிட மாணவர்கள் நல விடுதி அமைந்திருந்த இடம் முரசொலிக்கு கைமாறியது எப்படி? என்பன தான் அந்த வினாக்கள். அந்த வினாக்களுக்கு மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்னும் பதிலளிக்கவில்லை.

இரண்டாவதாக, பொதுவாழ்விலும், நீதிமன்றத்திலும் குற்றம் சுமத்தியவர் தான் அதை நிரூபித்திட வேண்டும் என்ற புதிய உண்மையை மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். மகிழ்ச்சி. அப்படியானால், முரசொலி நிலம் குறித்து மருத்துவர் அய்யா அவர்கள் கடந்த 17.10.2019 அன்று டுவிட்டரில் பதிவிட்ட 24 மணி நேரத்தில், 1960-களில் வாங்கப்பட்ட அஞ்சுகம் பதிப்பகத்திற்கு சொந்தமான நிலத்திற்கு 20 ஆண்டுகள் கழித்து பெறப்பட்ட பட்டாவை அவசரம், அவசரமாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டது ஏன்? முரசொலி பட்டா நிலம் என்று நம்ப வைக்கவா?

முரசொலி நிலம் குறித்த பட்டாவை வெளியிட்ட மு.க.ஸ்டாலின் மூலப் பத்திரத்தை வெளியிடாதது ஏன்? என்று மருத்துவர் அய்யா வினா எழுப்பி இன்றுடன் 20 நாட்கள் ஆகி விட்ட நிலையில் அந்த பத்திரங்களை ஸ்டாலின் இன்று வரை வெளியிடவில்லை என்றால், அதன் பொருள் என்ன? என்பது அனைவருக்கும் தெரியும். 24 மணி நேரத்தில் பட்டா வெளியான நிலையில், 20 நாட்களாகியும் மூலப்பத்திரம் வெளிவரவில்லை என்பதிலிருந்தே இந்த விஷயத்தில் உண்மை என்ன? என்பது உலகத்திற்கு தெரிந்து விட்டது.

இப்போதும் கூட எந்த ஆணையத்திடம், எப்போது ஆவணங்களை தாக்கல் செய்யப் போகிறார் என்பதை ஸ்டாலின் கூறவில்லை. எனினும், முரசொலி நிலம் தொடர்பான ஆவணங்களை அவர் தாக்கல் செய்யப் போகும் நாள் எந்த நாளோ, அந்த நாளுக்காக தமிழ்நாடு காத்திருக்கிறது. அந்த ஆவணங்கள் மற்றும் அது குறித்த விசாரணையின் முடிவில் முரசொலி நிலம் குறித்த புதிய உண்மைகள் கூட வெளிவரலாம் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

author avatar
Parthipan K