நீட் தேர்விற்கு பெரும்பாலானவர்களின் எதிர்ப்பு! தகவல் அளித்த ஏ.கே.ராஜன்!

0
85
Most people oppose NEET selection! AK Rajan provided the information!
Most people oppose NEET selection! AK Rajan provided the information!

நீட் தேர்விற்கு பெரும்பாலானவர்களின் எதிர்ப்பு! தகவல் அளித்த ஏ.கே.ராஜன்!

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு ஆரம்பத்தில் இருந்தே எதிர்ப்பு இருந்து வந்த நிலையில், திமுக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் நீட் தேர்வு முறையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடக்க கூடாது என்று வலியுறுத்தி வந்தன. மேலும் திமுக தனது தேர்தல் அறிக்கையின் போது நாங்கள் ஆட்சி அமைத்ததும் இந்த தேர்வுகள் ரத்து செய்யப்படும் என்றும் அறிவித்து இருந்தது.

தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்ற நிலையில், தமிழ்நாடு  மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வின் தாக்கம் எந்த அளவில் இருக்கிறது. மாணவர்கள் இந்த தேர்தல் என்ன விளைவுகளை சந்திக்கிறார்கள் என்பது உள்ளிட்ட பலவற்றை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க கடந்த மாதம் பத்தாம் தேதி ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் 9 பேர் கொண்ட குழுவை அமைத்து உத்தரவிட்டார்.

அந்த குழுவினர் நீட் தேர்வின் தாக்கம் குறித்து, புள்ளி விவரங்களின் அடிப்படையில் ஆராய்ந்து வந்தனர். இதையடுத்து தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வின் தாக்கம் தொடர்பான ஆய்வறிக்கையை தமிழக அரசின் சார்பில் அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழுவின் தலைவரும், சென்னை ஐகோர்ட்டின் ஓய்வு பெற்ற நீதிபதியுமான ஏ.கே.ராஜன் குழுவினர் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரிடம் சமர்ப்பித்தனர்.

அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது அவர் இவ்வாறு கூறினார். 165 பக்கம் கொண்ட அறிக்கையை அளித்து விட்டோம். அதில் என்ன கருத்துக்கள், பரிந்துரைகள் கூறப்பட்டுள்ளன என்பதை பற்றி நான் உங்களிடம் சொல்ல முடியாது. அரசு தான் உங்களுக்கு தெரிவிக்க வேண்டும். 2006 ஆம் ஆண்டு தொழிற்கல்வி நுழைவுத் தேர்வு தடை சட்டம் என்ற சட்டம் இருந்தது. அந்த சட்டத்தைப் பயன்படுத்தி சுப்ரீம் கோர்ட்டில் வாதிட்டிருந்தால் தமிழகத்திற்கு நீட்தேர்வு வந்திருக்காது என்று ஏற்கனவே கருத்துக் கூறி இருந்தேன்.

அதை இந்த அறிக்கையில் வலியுறுத்தி இருக்கிறேன். இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கியமான அம்சங்களை முதலமைச்சரிடம் காட்டினோம் அதை அவர் பார்த்தார். அதற்கு அவர் என்ன சொன்னார் என்பதை நான் சொல்ல முடியாது. பெரும்பான்மையானவர்களின் கருத்து இந்த தேர்வு வேண்டாம் என்பதாகத்தான் உள்ளது. கருத்துக்களை கேட்பதற்கான கால அவகாசம் போதுமானதாக இருந்தது. அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் கேட்டிருக்கிறோம். 86 ஆயிரம் பேர் கருத்து கூறியுள்ளனர். அரசியல் கட்சிகளும் கருத்து கூறியிருந்தனர்.

இமெயில் மூலமாகவும் கருத்துக்களை பெற்றோம். பலர் நீட் வேண்டாம். அது பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று தெரிவித்தனர். நீட் தேர்வுக்கு பிறகு கிராமப்புற மாணவர் சேர்க்கை எப்படி இருந்தது என்பதை எல்லாம் அறிக்கையில் கூறி இருக்கிறோம். எங்கள் குழுவின் பணிக்காலம் முடிந்து விட்டது. இந்த தேர்வு ஏற்படுத்தும் தாக்கம் பற்றி இதில் குறிப்பிட்டுள்ளோம். அனைத்து தரப்பினரும் உள்ளடக்கிய அறிக்கையாக இது இருக்கும்.

இந்த தேர்வை அனுமதிப்பது அல்லது அனுமதிக்காதது என்பதெல்லாம் தமிழக அரசின் முடிவுக்கு உட்பட்டது. நாங்கள் எந்த கருத்தும் கூற கூறுவது சரியல்ல. நாங்கள் பெற்றிருப்பது கருத்துக்களை மட்டும் தான் இதற்கான வாக்குப்பதிவை நாங்கள் நடத்தவில்லை. இந்த ஆண்டு மட்டும், இரண்டு ஆண்டுகளுக்கு மட்டும் நடத்தலாம் என்பது போன்ற கருத்துக்களும் வந்துள்ளன. அதையும் பதிவு செய்துள்ளோம்.

அப்படி வந்த கருத்துக்களின் தரவுகளின் அடிப்படையில் அறிக்கை தயாரித்து உள்ளோம். எங்களின் தனிப்பட்ட கருத்து எதுவும் அதில் இடம்பெறவில்லை. அதை நாங்கள் வலியுறுத்தவும் இல்லை. இந்த தேர்வினால் உளவியல் ரீதியான பிரச்சினைகள் மட்டுமல்ல. பொருளாதாரம், சமூக நீதி, சட்டம் போன்ற பல பிரச்சினைகள் உள்ளன. தனியார் பள்ளி மாணவர்கள் மட்டுமே மருத்துவக் கல்வியில் இடம் பெறுவது தொடர்பான கருத்துக்களையும் அறிக்கையில் பதிவு செய்துள்ளோம். இந்த அறிக்கையை நாங்கள் தயார் செய்து அளித்ததில் முழு திருப்தி அடைந்து உள்ளோம். இந்த அறிக்கையால் நீட்தேர்வு ரத்தாகுமா? என்ற கேள்விக்கு முதல்வர்தான் பதில் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.