இந்தியாவுக்கு சொந்தமான நீரை பாகிஸ்தான் பக்கம் செல்லாமல் தடுப்போம் என பிரதமர் மோடி உறுதி

இந்தியாவில் உள்ள விவசாயிகளுக்குச் சொந்தமான நீரை பாகிஸ்தான் பக்கம் செல்ல விடாமல் தடுப்போம், மேலும் இதற்காக விவசாயிகளுகளுடன் இணைந்து போராடுவோம் என்றும் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.

வரும் 21 ஆம் தேதி ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையடுத்து வரும் 24 ஆம் தேதி இதற்கான வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளது. இந்நிலையை இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளன.

ஹரியானாவில் உள்ள சார்கி தாத்ரி என்ற பகுதியில் பாஜகவின் சார்பில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

கடந்த 70 ஆண்டுகளாக இந்தியாவுக்குச் சொந்தமான நீர், ஹரியானா விவசாயிகளுக்குச் சொந்தமான நீர் பாகிஸ்தான் நாட்டிற்குள் பாய்கிறது. இந்த நீரை மோடியாகிய நான் தடுத்து நிறுத்தி, உங்களுடைய நிலங்களுக்கும், வீடுகளுக்கும் கொண்டு வருவேன்.

பாகிஸ்தான் பக்கம் பாயும் நீரைப் பெறுவதற்கு ஹரியானா, ராஜஸ்தான் மாநில மக்களுக்கு அதிக உரிமை இருக்கிறது. இந்த நீரை இதற்கு முன் ஆண்ட அரசுகள் தடுத்திருக்க வேண்டும். ஆனால் இனிமேல் உங்கள் போராட்டத்தில் உங்களுக்காக மோடியாகிய நான் போராடுவேன்.

சமீபத்தில் தமிழகத்தின் மகாபலிபுரத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும், நானும் சந்தித்தோம். அப்போது, என்னிடம் ஜி ஜின்பிங் சமீபத்தில் அவர் பார்த்த ‘தங்கல்’ திரைப்படம் பற்றி பேசினார். அதில் இந்தியாவில் உள்ள பெண்கள் சிறப்பாக நடித்துள்ளதாக அவர் பெருமையாகக் குறிப்பிட்டார். இதைக் கேட்கும்போது ஹரியானாவைப் பற்றி பெருமையாக இருந்தது.

ஹரியானா கிராமங்களில் உள்ள பெண்கள் , ஆண்கள் ஆதரவு இல்லாமல் முதல்வர் மனோகர் லால் கட்டாரின் பெண் குழந்தைகளைக் காப்போம் தி்ட்டம் வெற்றி பெற்று இருக்காது.

ஜம்மு காஷ்மீரில் கடந்த 70 ஆண்டுகளாக நீடித்துவந்த தீவிரவாதத்தை 370 பிரிவை நீக்கியதன் மூலம் முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறோம்.

இந்த முடிவை நாட்டில் உள்ள அனைவரும் பாராட்டுகிறார்கள். ஆனால், காங்கிரஸ் கட்சியில் உள்ள சில தலைவர்கள், மக்களிடமும், உலக நாடுகளிடமும் பொய்யான தகவல்களை பரப்புகிறார்கள்.

எதிர்க்கட்சிகளிடம் நான் கேட்கிறேன், உங்களுக்கு துணிச்சல் இருந்தால், மீண்டும் அரசியலமைப்பு 370-ம் பிரிவை திரும்பக் கொண்டுவர முடியுமா.

நான் ஹரியானாவுக்கு தேர்தல் பிரச்சாரத்துக்காக வரவில்லை. பாஜகவுக்காகவும் பிரச்சாரம் செய்யவில்லை. ஹரியானா மக்களிடமும் வாக்குக் கேட்கவில்லை. ஹரியானா என்னை அழைக்கும் வரை நான் இங்கு வருவதை நான் நிறுத்தமாட்டேன். என் மீது நீங்கள் அளவு கடந்த அன்பை காட்டுகிறீர்கள்.

இந்த தீபாவளிப் பண்டிகையை நமது வீட்டில் உள்ள பெண் குழந்தைகளுக்காக அர்ப்பணியுங்கள். இந்த ஆண்டு நமக்கு இரு வகையான தீபாவளி இருக்கிறது.

மண் விளக்கில் தீபம் ஏற்றும் தீபாவளி, தாமரையில் ஒளி ஏற்றும் தீபாவளி. ஆதலால், நம்முடைய தீபாவளியை நமது வீட்டில் உள்ள பெண் குழந்தைகளுக்கு அர்ப்பணித்து அவர்களின் சாதனைகளைப் போற்ற வேண்டும்.

ஹரியானாவுக்கு மீண்டும் சேவை செய்ய பாஜக முடிவு செய்துவி்ட்டது, மக்களும் எங்களுக்கு வாய்ப்பு வழங்க முடிவு செய்துவிட்டார்கள் என்பதும் தெளிவாகத் தெரிகிறது என்றும் பிரதமர் மோடி பேசினார்.

Copy
WhatsApp chat