நீங்க திருப்பி அனுப்பிட்டா விட்ருவோமா? ரிப்பீட்டு மீண்டும் நீட் எதிர்ப்பு மசோதா நிறைவேற்றப்படும் முதலமைச்சர் ஆவேசம்!

0
74

சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் திமுக அபார வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.இந்த தேர்தலுக்காக திமுக அளித்த வாக்குறுதிகளில் மிக முக்கியமான வாக்குறுதி நீட் தேர்வு ரத்து என்ற வாக்குறுதி.

தேர்தல் பிரச்சாரத்தில் உரையாற்றிய திமுகவின் முன்னணி தலைவர்கள் அனைவரும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உடனடியாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும், அதை எவ்வாறு செய்வது என்பது எங்களுக்கு நன்றாக தெரியும் என்பது போன்ற வசனங்களை பேசினார்கள்.

ஆனாலும் திமுக ஆட்சிக்கு வந்து சற்றேறக்குறைய 8 மாத காலங்கள் ஆகி விட்ட நிலையில், நீட் தேர்வு தொடர்பாக பேச்சுவார்த்தை மட்டுமே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதனை தடுத்து நிறுத்துவதற்கான எந்த முயற்சியிலும் திமுக அரசு ஈடுபடவில்லை என்பதே பலரின் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது.

இந்த நிலையில், விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறயிருப்பதை முன்னிட்டு இதே ஆயுதத்தை தற்போதும் கையிலெடுத்திருக்கிறது திமுக.

அதாவது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கோயம்புத்தூர் மாவட்டத்தில் திமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்கும் விதமாக அந்த கட்சியின் தலைவரும், தமிழகத்தின் முதலமைச்சருமான ஸ்டாலின் நேற்று சென்னையில் இருந்தவாறு காணொலிக் காட்சியின் மூலமாக பிரச்சாரத்தை செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது விரைவில் நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு உள்ளாட்சியிலும் தொடரட்டும் நம்ம ஆட்சி என்ற முழக்கத்துடன் நாம் தேர்தலைச் சந்திக்கின்றோம்.

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தமிழக மக்கள் தங்கள் விடியலுக்கும், எதிர்காலத்திற்கும், திமுக ஆட்சியை அமைந்தால்தான் சரியாக இருக்கும் என்று தொலைநோக்கு பார்வையுடன் வாக்களித்தார்கள் என குறிப்பிட்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

10 வருட காலம் ஆட்சியில் இருந்த ஒரு கட்சியை ஒதுக்கி விட்டு நம்மை தமிழக மக்கள் ஆட்சியில் அமர வைத்திருக்கிறார்கள். ஒரு கட்சி என்பது 5 ஆண்டுகாலம் ஆட்சியில் இருக்கும். அந்த 5 வருட காலத்துக்கும் பொதுமக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி தர வேண்டும், இதுதான் நல்லாட்சியின் இலக்கு என தெரிவித்திருக்கிறார்.

ஆனாலும் ஆட்சிக்கு வந்து இன்னமும் 1ஆண்டு காலம் கூட நிறைவு பெறவில்லை அதற்குள்ளாகவே கொடுத்த வாக்குறுதிகளில் முக்கால் பங்குக்கு மேல் நிறைவேற்றிக் கொடுத்த ஆட்சியை தலைசிறந்த ஆட்சி என்றுதானே சொல்ல முடியும். அது போன்ற தலைசிறந்த ஆட்சிக்கு இலக்கணமாக நம்முடைய திமுக ஆட்சியை திகழ்ந்து வருகிறது என்று குறிப்பிட்டிருக்கிறார் முதலமைச்சர்.

பெரும்பான்மை பலத்தால் சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறோம், அதேபோல உள்ளாட்சி அமைப்புகளிலும் நாம் முழுமையான வெற்றியை பெற்றால் தான் நாம் நிறைவேற்றும் திட்டங்களை பொதுமக்களுக்கு முழுமையாக கொண்டு சேர்க்க முடியுமென்று தெரிவித்திருக்கிறார் முதலமைச்சர்.

அந்த எண்ணத்துடன் தான் உள்ளாட்சியிலும் தொடரட்டும் நம்ம ஆட்சி என்ற முழக்கத்தை நாம் முன்னெடுத்திருக்கின்றோம் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளும் வளர வேண்டும் ,அனைத்து துறைகளும் வளர வேண்டும், என்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படும் ஆட்சியே நம்முடைய ஆட்சி என தெரிவித்திருக்கிறார்.

தமிழகத்தில் மட்டுமல்ல மத்திய அரசிடம் நம்முடைய தமிழ்நாட்டிற்கான உரிமைகளை போராடியும், வாதாடியும், பெறுகின்ற இயக்கமாக, ஆட்சியாக, திமுக ஆட்சி இருக்கும் தமிழகத்தின் ஏழை, எளிய, மாணவர்களின் மருத்துவ கல்வி கனவை சிதைப்பதாக நீட் தேர்வு இருந்துவருகிறது. அரியலூர் அனிதா தொடங்கி 10கும் மேற்பட்ட மாணவ, மாணவியரை நாம் இழந்திருக்கிறோம் என்று குறிப்பிட்டிருக்கிறார் முதலமைச்சர்.

நீட் தேர்வு என்பது பல லட்சம் கொடுத்து பயிற்சி மையங்களில் படிக்க வசதி இருக்கும் மாணவர்களுக்கு தான் சரியாக இருக்கும். முதல் ஆண்டு இடம் கிடைக்கவில்லையென்றால் அடுத்த வருடமும் லட்சக்கணக்கில் பணம் கட்டி பயிற்சி பெறுகிறார்கள். இது அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் முடிகின்ற விவகாரமா? ஏழைகளால் முடியுமா? முடியாது. அரசு பள்ளியில் படிப்பவர்களால் முடியுமா? முடியாது.

நீட் தேர்வில் இருந்து விலக்கு வழங்க வேண்டுமென்று வலியுறுத்தும் மசோதாவை அவர் திருப்பி அனுப்பி இருக்கின்றார் என்று தெரிந்தவுடன் மறுநாளே அதாவது நேற்றைய தினமே அனைத்துக் கட்சி கூட்டம் ஒன்றைக் கூட்டினேன். அடுத்ததாக நாளை தமிழக சட்டசபை கூடவிருக்கிறது மீண்டும் அதே மசோதாவை இன்னும் வலிமையுடன் நிறைவேற்றடியிருக்கிறோம் என்று தெரிவித்திருக்கிறார்.

ஏதோ அரசியலுக்காக இதனை நாங்கள் எதிர்க்கவில்லை, மக்கள் விரோத மத்திய பாஜக அரசை எதிர்ப்பதற்கு எத்தனையோ விவகாரங்கள் இருக்கின்றன. மக்களுக்கு எதிரான அவ்வளவு செயல்களை அவர்கள் செய்து கொண்டு வருகிறார்கள். அதை வைத்துத்தான் அரசியல் நடத்த வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என்று தெரிவித்திருக்கிறார் முதலமைச்சர்.

தற்சமயம் நாம் துணிச்சலுடன் ஆளுநர் திருப்பி அனுப்பிய சட்ட மசோதாவை மீண்டும் நிறைவேற்றி அவருக்கு அனுப்பவுள்ளோம் நீட் எதிர்ப்பிலிருந்து பின்வாங்க மாட்டோம் .நீட் மட்டுமல்ல தமிழகத்திற்கு பாதகமான திட்டம் எதுவாக இருந்தாலும் அனுமதிக்க மாட்டோம் என்று தெரிவித்திருக்கிறார்.