வருங்கால தமிழகமே என அன்புமணியை பாராட்டிய அமைச்சர் பொன்முடி! 

0
200
K. Ponmudy
K. Ponmudy

வருங்கால தமிழகமே என அன்புமணியை பாராட்டிய அமைச்சர் பொன்முடி!

 

திமுகவின் இளைஞர் அணி தலைவரும், சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை தமிழகம் முழுவதும் திமுகவினர் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்

 

அந்த வகையில் விழுப்புரம் தெற்கு மாவட்டம் சார்பில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி பிறந்த நாளையொட்டி ரத்த தான முகாம், அக்கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியை புகழேந்தி எம்.எல்.ஏ. தாங்கி நடத்தினார். மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தினகரன் வரவேற்று பேசினார். மேலும் இந்த முகாமை கவுதமசிகாமணி எம்.பி. துவக்கி வைத்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பொன்முடி, விழுப்புரம் சட்ட மன்ற உறுப்பினர் லட்சுமணன் உள்ளிட்ட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

 

இந்நிலையில் திமுக நடத்திய இந்த ரத்த தான முகாமில் ஒரே நேரத்தில் 20 க்கும் மேற்பட்ட டேபிள்களில் அக்கட்சியை சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்று ரத்த தானம் வழங்கினர். அந்த வகையில் நேற்று நடந்த இந்த முகாமில் 150 க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் வழங்கினர். இந்த முகாமில் ஆர்வமிகுதியால் சில திமுகவினர் ஒரே டேபிளில் 2 பேர் நெருக்கமாக படுத்து கொண்டு ரத்த தானம் வழங்கியது அங்கிருந்தவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. கட்சி இளைஞர் அணி தலைவர் பிறந்த நாளன்று ரத்த தானம் வழங்குவது சிறப்பான காரியம் தான். ஆனால் ஒரே படுக்கையில் 2 பேர் படுக்க வைத்து ரத்த தானம் பெறுவது மக்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

 

மேலும் இந்த முகாமை துவக்கி வைத்து பேசிய அமைச்சர் பொன்முடி பாமக தலைவர் அன்புமணி அவர்களை புகழ்ந்து பேசி அடுத்த சர்ச்சையை கிளப்பியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

அமைச்சர் பொன்முடி இந்த நிகழ்ச்சியில் தனது உரையை பேச ஆரம்பித்த போது, வருங்கால தமிழகமாக இருக்கும் தம்பியை, குடும்பத்தில் ஒருவராக தான் பார்ப்பதாகவும், அப்படி சிறப்பான உதயநிதி என்று கூறுவதற்கு பதிலாக, தயாநிதி… அன்புமணி என்று பெயரை மாற்றி உளறி பேசியது அங்கிருந்த திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் பெயரை தவறாக குறிப்பிட்டுவிட்டோம் என சுதாரித்து கொண்ட அமைச்சர் பொன்முடி உடனடியாக மன்னிக்கவும் உதயநிதி என மாற்றி கூறினார்.

 

ஏற்கனவே அமைச்சர் பொன்முடி பெண்களின் இலவச பேருந்து பயணம் குறித்து பேசியது சர்ச்சைக்கு உள்ளான நிலையில் தற்போது கட்சியின் இளைஞர் அணி தலைவர் உதயநிதி பெயரையே அமைச்சர் மறந்து தயாநிதி, அன்புமணி என்று கூறிய சம்பவம் முகாமில் கலந்து கொண்டவர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.