தமிழகத்தில் மின்வெட்டு பிரச்சனையை இல்லையாம்! சொல்வது யார் தெரியுமா?

0
127

சென்னையில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அந்த சந்திப்பின்போது தமிழ்நாட்டில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மின்சாரம் நிறுத்தப்படுகிறது. அவை அந்தந்த மின் நிலையங்களை பொறுத்து வெவ்வேறு தினங்களில் தடை செய்யப்படுகிறது என்று தெரிவித்திருக்கிறார்.

பராமரிப்பு பணி மின் நிறுத்தத்தை வைத்து தமிழகத்தில் மின் வெட்டு என்று தெரிவித்தால் அதை ஏற்றுக்கொள்ள இயலாது என்று தெரிவித்த அவர், பராமரிப்பு பணிகள் முடிவுற்ற பின் உடனடியாக வழங்கப்படுகிறது. தமிழகத்தில் மின்வெட்டு பிரச்சனை இருப்பதாக ஒரு சிலர் புரளியைக் கிளப்ப முயற்சி செய்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

தமிழ்நாட்டில் மின்வெட்டு என்ற பிரச்சினையே கிடையாது மின் கட்டணம் குறித்து சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக தவறான தகவல் பதிவிடப்படுகிறது. மின் கட்டணத்தில் தவறுகள் இருந்தால் உடனடியாக அந்தத் துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்திருக்கிறார் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி.

ஆனாலும் தமிழகத்தில் ஆங்காங்கே மின்வெட்டு பிரச்சனைகள் இருந்து கொண்டுதான் இருக்கிறது. அவற்றை மின்சாரத்துறை அமைச்சர் சரிவர கவனிக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும் பெருநகரங்களில் பெரும்பாலும் மின்சாரத்தடை ஏற்படுவதில்லை. மாறாக கிராமங்களில் இந்த மின்வெட்டு பிரச்சனையை இருந்து கொண்டுதான் இருக்கிறது.

கிராமங்களில் ஆங்காங்கே மின்சாரம் செல்லும் வழியில் மரங்கள் போன்றவை இருப்பதால் மின்சார தடை அடிக்கடி ஏற்படுகிறது. அந்த பிரச்சனையை அங்கே இருக்கும் மின்சார துறை சார்ந்த நபர்களும் சரிவர கவனிக்காததால் அடிக்கடி கிராமப்புறங்களில் மின்சார பிரச்சனை ஏற்பட்டு வருகிறது.

அதோடு பெரம்பலூர் மாவட்டம் வசிஸ்டபுரம் பஞ்சாயத்தை சார்ந்த எம் கே நல்லூர், பி கே நல்லூர் மற்றும் அதனை சுற்றி இருக்கக்கூடிய ஒரு சில கிராமங்களில் நாள்தோறும் மின்வெட்டு பிரச்சனை இருந்து கொண்டுதானிருக்கிறது. பகலில் மின்தடை ஏற்படுகிறது என்றால் இரவிலும் கூட அதே நிலை தான் தொடர்கிறது.

காரணம் இங்கே மின்சாரம் கொடுப்பதற்கான தலைமை இடம் அரியலூர் மாவட்டம் கூத்தூர் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அங்கிருந்து இங்கே வரக்கூடிய மின்சாரத்தை பெரும்பாலும் தடை செய்து வைத்திருக்கிறார்கள். இதன் காரணமாகவே, இந்த கிராமங்களில் பெரும்பாலும் மின்சார தடை ஏற்பட்டு வருகிறது.அதோடு இவ்வாறு உள் கிராமங்களில் மின் தடையை ஏற்படுத்தி விட்டு அரியலூர் போன்ற பெரிய நகரங்களில் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளுக்கு மின்சாரத்தை வழங்குகிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

இதற்கு உடனடியாக ஒரு நல்ல தீர்வை கொடுக்க வேண்டும் என்பது இந்தப் பகுதி மக்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது. ஆனால் இந்தப் பகுதி மக்களின் கோரிக்கையை கண்டுகொள்ளாத தமிழக அரசு, மின்சார துறை அமைச்சரும் மின்வெட்டு பிரச்சனையே இல்லை என்று மார்தட்டிக் கொள்வது வேடிக்கையாக இருக்கிறது.