மீண்டும் சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் பொன்முடி! நேருக்கு நேர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் – அதிருப்தியில் திமுகவினர்

0
193
Minister Ponmudi
Minister Ponmudi
மீண்டும் சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் பொன்முடி! நேருக்கு நேர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் – அதிருப்தியில் திமுகவினர்

திமுக தேர்தல் வாக்குறுதியில் அளித்திருந்த பெண்களுக்கான இலவச பேருந்து பயணத்தை ஒருவழியாக சில கட்டுப்பாடுகளுடன் நிறைவேற்றியுள்ளனர். பெண்களுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உதவித்தொகை, நீட் விலக்கு உள்ளிட்ட வாக்குறுதிகள் குறித்து எதுவும் செய்யவில்லை என்றாலும் இலவச பேருந்து பயணத்தால் பெண்கள் மத்தியில் ஓரளவு நல்ல பெயர் ஏற்பட்டுள்ளது.

இதை கெடுக்கும் விதமாக திமுக அமைச்சர்களே பேசி வருவது அக்கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இலவச பேருந்து பயணத்தை செயல்படுத்திய திமுக அரசு அதை முறையாக செய்யவில்லை என எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திமுக தேர்தல் வாக்குறுதியின் படி நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணமில்லாமல் பயணிக்கும் சலுகையை முதல்வர் வழங்கியுள்ள நிலையில், இதை பெருமை படுத்தும் விதமாக பேசுவதாக நினைத்து அமைச்சர் பொன்முடி அதனை ஓசி பயணம் எனக் குறிப்பிட்டார்.

ஓசி பயணம் என்று குறிப்பிட்டது பெண்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் மத்தியில் கடும் கண்டனத்தை பெற்றதோடு சமூக வலைதளங்களிலும் அமைச்சர் பொன்முடி மீது விமர்சனங்கள் தொடர்ந்து வைக்கப்பட்டன.

விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பெண்கள் அரசு நகரப் பேருந்துகளில் ஓசியில் பயணிப்பதாக பெருமை பொங்க குறிப்பிட்டார். ஓசியிலே தானே போறிங்க என அங்கே கூடியிருந்த பெண்களிடம் கேட்கும்  அமைச்சர் பொன்முடியின் பேச்சு அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனைத்தொடர்ந்து எதிர்க்கட்சிகள் அமைச்சர் பொன்முடி பேச்சுக்கு எதிராக கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன.

ஓசி பயணம்
இவரது பேச்சைக் கண்டிக்கும் விதமாக தமிழகமெங்கும் பெண்கள் இலவச பேருந்து பயண திட்டத்தை விமர்சிக்கும் விதமாக வீடியோக்கள் வெளியாகி வருகின்றன. சில தினங்களுக்கு முன்பு கோவையில் மூதாட்டி ஒருவர் எனக்கு ஓசி டிக்கெட் வேண்டாம் என வாக்குவாதம் செய்யும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அமைச்சர் பொன்முடியிடம் பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு விளையாட்டாக பேசியதை பெரிது படுத்த வேண்டாம் என்று சமாளித்துள்ளார். மேலும் இதுகுறித்து கேள்வி கேட்க கூடாது எனவும், உயர்கல்வித்துறை சம்பந்தமாக மட்டுமே கேள்வி கேட்க வேண்டும் எனவும் செய்தியாளர்களுக்கு கட்டளை இட்டுள்ளார்.
இந்த சர்ச்சை வைரலாகி வரும் இந்நிலையில் இவர் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளது திமுகவினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஓசி பஸ் விவகாரத்திற்கு முன்பு மேடையிலிருந்த திமுக பெண் நிர்வாகியை நீ SC தானே என கேட்டதும் சர்ச்சையானது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் வீரப்பாண்டி ஊராட்சியில் நடைபெற்ற பஞ்சாயத்து குறை தீர்ப்பு ஊராட்சி மன்ற கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் பொன்முடி ஊராட்சி நிர்வாகம் குறித்து குறையை சொல்ல முயற்சித்த பெண் நிர்வாகியிடம் மரியாதையை இல்லாமல் நடந்து கொண்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.குறை கூற முயற்சித்த பெண் அதிமுகவை சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர் என்பதால் நீங்க அப்படி தான் பேசுவீங்க என அமைச்சர் அவரை பேச விடாமல் தடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஒரு சில மாதங்களில் திமுகவின் முன்னணி நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் பலரும் இப்படி தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வம்பை விலைக்கு வாங்கி வருவதால் அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் தர்ம சங்கடமான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. அமைச்சர்கள் மூர்த்தி, கே.என்.நேரு, பொன்முடி, துரைமுருகன், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், சிவசங்கர் மற்றும் தருமபுரி எம்பி செந்தில்குமார் உள்ள்ளிட்டோர் சமீபத்தில் சர்ச்சையில் சிக்கியவர்கள் ஆவர்.