மத்திய அரசை குற்றம்சாட்ட விரும்பவில்லை! அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!

0
90

பேரிடர் காலத்தில் குற்றச்சாட்டுகளைக் கூறி மத்திய அரசுடனான உறவில் விரிசலை ஏற்படுத்திக் கொள்ள விரும்பவில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில், சுகாதாரப் பணியாளர்களுக்கு உணவு தயாரித்து வழங்கும் இடத்தை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் பார்வையிட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பொதுமுடக்க நடவடிக்கையால் தமிழகத்தில் கொரோனா தொற்றின் அளவு சரி பாதியாக குறைந்துள்ளது என்றார்.

கறுப்புப் பூஞ்சை நோயால் 1,502 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், இந்நோய்க்கான தடுப்பு மருந்தை 3,060 என்ற எண்ணிக்கையிலேயே நடுவணரசு வழங்கியுள்ளதாக தெரிவித்தார். எனினும் பேரிடர் காலத்தில் குற்றச்சாட்டுகளைக் கூறி, தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையேயான உறவில் விரிசலை ஏற்படுத்திக் கொள்ள விரும்பவில்லை என்றும் அவர் கூறினார்.

சென்னை ராஜீவ்காந்தி பொது மருத்துவமனையில் பெண் உயிரிழந்தது குறித்து அனைத்துக் கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.