சட்டசபையில் கண்ணீர் விட்ட அமைச்சர்!

0
63

மருத்துவமனையிலிருந்து மறுபிறவியில் வந்திருக்கிறேன் என்று தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் சட்டசபையில் கண்ணீருடன் தெரிவித்திருக்கிறார்.

சென்னையில் இருக்கின்ற கலைவாணர் அரங்கில் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகின்றது. இதில் சட்டசபை விதி எண் 110 இன் கீழ் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய விவசாய கடன் மற்றும் நகை கடன் அதோடு மகளிர் சுய உதவிக் குழுக்கள் வாங்கிய கடன் போன்றவற்றை தள்ளுபடி செய்து முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டு வருகின்றார். இந்த நிலையில், பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதியான இன்றைய தினமும் சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வருகிறது. அதில் மருத்துவமனையில் இருந்து மறுபிறவி எடுத்து இந்த பேரவைக்கு வந்து சேர்ந்திருக்கிறேன் என்று தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் உருக்கமாக தெரிவித்திருக்கிறார்.

வைரஸ் தொற்றில் இருந்து குணமாகி அதன்பிறகு இந்தக் கூட்டத் தொடரில் இன்று உரையாற்றிய அமைச்சர் காமராஜ், மறுபடியும் நான் உயிருடன் வருவேனா என்ற நிலை இருந்து வந்தது. ஆனாலும் நான் மறுபிறவி எடுத்து வந்திருக்கிறேன். அதற்காக முதலமைச்சர் அவர்களுக்கும் மற்றும் துணை முதலமைச்சர் அவர்களுக்கும் நன்றி தெரிவிக்க நான் கடமைப்பட்டிருக்கிறேன் என்று கண்ணீருடன் தெரிவித்திருக்கிறார்.

அமைச்சர் காமராஜ் வைரஸ் தொற்றால் பாதிப்படைந்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மற்றும் மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருடைய உடல் நிலையில், எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் எம்ஜிஎம் மருத்துவமனைக்கு அமைச்சர் காமராஜ் மாற்றப்பட்டார். அவருடைய நுரையீரல் 95% பாதிப்புக்கு உள்ளாகி இருந்தது. அவர் மறுபடியும் வைரஸ் தொற்று இருந்து மீண்டு வந்தது அதிசயம் தான் என்று மருத்துவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். அமைச்சர் காமராஜ் மருத்துவமனையில் இருந்த சமயத்தில் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும், அவருடைய உடல்நிலை தொடர்பாக மருத்துவர்களிடம் தொடர்ந்து கேட்டறிந்து வந்தார்கள்.

அதேபோல தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து துறை அமைச்சர்களும் மருத்துவமனைக்குச் சென்று திரு. காமராஜ் அவர்களின் குடும்பத்திடம் ஆறுதல் தெரிவித்தும் வந்தார்கள் இந்த நிலையில், இந்த வைரஸ் தொற்றிலிருந்து நான் குணம் அடைந்து வந்தது என்னுடைய மறுபிறவி தான் என்று தெரிவித்திருக்கிறார் அமைச்சர் காமராஜ்.