ஊட்டி மலை ரயில் தனியார் மயமாக்கப்பட்டதா..?? தெற்கு ரயில்வே விளக்கம்!

0
122

மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு செல்லும் மலை ரயில் தனியார் நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளதாகவும், கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. இதற்கு தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.

மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு செல்லும் மலை ரயில் தனியார் மயமாக்கப்பட்டதாக தகவல் வெளியானது. அத்துடன் ரயிலின் முன் பகுதியில் தெற்கு ரயில்வே இலட்சினைகள் எதுவும் இல்லாமல் TN 43 என்ற தனியார் நிறுவனத்தின் பெயரில் இந்த ரயில் இயக்கப்படுகிறது தகவல்கள் வெளியானது. மேலும், மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு சென்று வர சாதாரண நாட்களில் அதிகபட்சமாக ரூ.475 ஆக இருந்த நிலையில், தற்போது நபர் ஒருவருக்கு ரூ.2,500 ரூபாய் முதல் 12 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியது. மேலும், இந்த சிறப்பு ரயிலில் இருக்கும் தனியார் நிறுவன பணிப்பெண்கள், காவி வண்ணத்தில் உடை அணிந்து காட்சியளித்தாகவும் தகவல்கள் பரவியது. ஆனால் இவை அனைத்தையும் தெற்கு ரயில்வே நிர்வாகம் மறுத்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே நிர்வாகம் கூறுகையில்,
ஊட்டி மலை ரயில் தனியார் மயமாக்கப்பட்டது, கட்டணம் உயர்த்தப்பட்டது போன்ற செய்திகள் முற்றிலும் தவறானது. ரயில்வே துறையின் பாலிசி படி எந்த ஒரு தனி நபர் வேண்டுமானாலும் full tariff rate (FTR ) என்ற முறையில் ஒரு குழுவிற்கு அல்லது சுற்றுலா ஏற்பாடு செய்வதற்காக அல்லது திருமண நிகிழ்ச்சிகாக பணம் செலுத்தினால் ரயில்வே துறை அவர்களுக்கு ஒரு ரயிலை அல்லது ஒரு ரயில் பெட்டியை இயக்கும். இது chartered trip என்றும் அழைக்கப்படும். அதன்படி ஒரு தனியார் நிறுவனம் ஊட்டி மலை ரயிலை வாடகைக்கு எடுத்து சென்றது.

பொதுவாக சாதாரண கட்டணத்தை காட்டிலும் இதுபோன்ற மொத்தமாக வாடகைக்கு எடுக்கப்பட்டு இயக்கப்படும் போது ரயிலின் கட்டணம் சற்று கூடுதலாக இருக்கும். மேலும், இந்த chartered trip க்கும் ரயில் துறையின் வழக்கமான சேவைக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. அத்துடன் ஊட்டி மலை ரயில் இப்போது வரை தெற்கு ரயில்வேயின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது.

மேலும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரயில்வேயின் வழக்கமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கபட்டுள்ளது. இதை இயக்க உரிய அனுமதி வந்த பிறகு பொது மக்களுக்காக ஏற்கனவே இருந்த கட்டணத்தின் அடிப்படையில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது

author avatar
Parthipan K