மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு சம்பவம்! நாகர்கோவிலில் காவல்துறையினர் அதிரடி விசாரணை!

0
81

கர்நாடக மாநிலம் மங்களூரில் கடந்த 19ஆம் தேதி குக்கர் குண்டுவெடிப்பு குறித்து முகமது ஷாரிக் என்பவர் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து தேசிய புலனாய்வு முகமை மற்றும் உளவுப் பிரிவு காவல் துறையினர் இது குறித்து தீவிர விசாரணையில் இறங்கினர். குக்கர் வெடிப்பில் ஈடுபட்ட நபரின் செல்போன் மற்றும் டைரி உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டு ஆய்வு செய்யப்பட்டதில் தமிழகத்தில் மதுரை, கோவை, நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களுக்கு அவர் சென்று வந்தது தெரிய வந்திருக்கிறது. இந்த நிலையில், மங்களூரூவிலிருந்து வந்த கர்நாடக மாநில காவல்துறையினர் நாகர்கோவிலில் நேற்று விசாரணை நடத்தி இருக்கிறார்கள்.

மீனாட்சிபுரம் பகுதியில் இருக்கின்ற தனியார் தங்கும் விடுதிகளில் சோதனை செய்தனர். அந்த சமயத்தில் பிரேம் ராஜ் என்ற பெயரில் போலி ஆவணங்களை வழங்கி கடந்த செப்டம்பர் மாதம் 9ம் தேதி முதல் 5 நாட்கள் நாகர்கோவிலில் ஷாரிக் தங்கி இருந்தது தெரியவந்திருக்கிறது.

அத்துடன் அவர் பயணம் செய்த பகுதிகளிலும் ஆய்வு செய்த காவல்துறையினர் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் விசாரணை செய்து அங்கிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதோடு நாகர்கோவில் அவர் தங்கியிருந்த 5 தினங்களில் யார், யாரை சந்தித்தார். எங்கெல்லாம் சென்றார் என்பது தொடர்பாகவும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.