வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்… விவசாயிகளுக்கு மானியம் உயர்வு… தேர்தல் அறிக்கையில் அசத்திய மம்தா பானர்ஜி!

0
82
Mamata_Banarjee_Election_Manifesto

மேற்குவங்க சட்டமன்றத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவிற்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், மாநில முதல்வர் மம்தா பானர்ஜி திரிணாமுல் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

வீடு தேடி ரேஷன் பொருட்கள், கணவனை இழந்த மற்றும் ஏழைப் பெண்களுக்கு உதவித்தொகை, மாணவர்களுக்கு கடன் அட்டை, வருடந்தோறும் 5 லட்சம் வேலைவாய்ப்புகள் என பல அதிரடி திட்டங்களை அறிவித்துள்ளார்.

சூடு பிடித்த தேர்தல் களம்

எட்டு கட்டமாக நடக்கும் சட்டமன்றத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவிற்கு இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில், மேற்குவங்க சட்டமன்றத் தேர்தல் களம் மிகவும் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஆட்சியைத் தக்க வைக்க வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், ஆட்சியை கைப்பற்றிய தீருவது என பாஜகவும் கங்கணம் கட்டி செயல்பட்டு வருகிறது.

10 ஆண்டு கால திரிணாமுல் ஆட்சி மீதான அதிருப்தி அலை, கட்சியின் முக்கிய புள்ளிகள் பாஜக பக்கம் தாவியது போன்ற சூழ்நிலைகளால், இந்த முறை பாஜக ஆட்சியைக் கைப்பற்றிவிடும் எனும் எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், மம்தா பானர்ஜிக்கு காயம் ஏற்பட்ட சம்பவம் மூலம் நிலைமை மாறி வருவதாகக் கூறப்படுகிறது.

கடந்த வாரம், நந்திகிராம் தொகுதியில் தனது முன்னாள் வலதுகரமும், இந்நாள் பாஜக வேட்பாளருமான சுவேந்து அதிகாரியை எதிர்த்து மனு தாக்கல் செய்துவிட்டு, தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், தன்னை சிலர் தாக்கி காலில் காயம் ஏற்படுத்தியதாக மம்தா பானர்ஜி கூறியிருந்தார். எனினும், இது தாக்குதல் அல்ல விபத்து தான் என்று தேர்தல் ஆணையம் தெளிவாக கூறிவிட்ட நிலையில், மம்தா பானர்ஜியும், தனக்குகாயம் ஏற்பட்டது விபத்து தான் என சொல்லிவிட்டார். ஆனால் திரிணாமுல் கட்சியினர், இது மம்தாவை கொள்ள நடந்த திட்டமிட்ட சதி என்றும் , இதற்கு பாஜக தான் காரணம் என குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், பாஜக மட்டுமல்லாது, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்து கட்சிகளுமே, மம்தா பானர்ஜி மீது தாக்குதல் எதுவும் நடைபெறவிலை என்றும், இது அனுதாப ஓட்டுக்களைப் பெற நடத்தும் நாடகம் என குற்றம் சாட்டி வருகின்றன. இதற்கிடையே, அனுதாப ஓட்டுக்களை அள்ள, மம்தா பானர்ஜியும் மருத்துவர்களின் அறிவுரைகளையும் மீறி, சக்கர நாற்காலியில் அமர்ந்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். இவ்வாறு மேற்குவங்கம் பரபரப்பாக உள்ள சூழ்நிலையில், மம்தா பானர்ஜி இன்று திரிணாமுல் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

திரிணாமுல் கட்சியின் தேர்தல் அறிக்கை | முக்கிய அறிவிப்புகள் 

  • விவசாயிகளுக்கு மானியம் ஏக்கருக்கு 6,000 ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
  • பங்களா அபாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 25 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும்.
  • வருடந்தோறும் 5 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
  • ரேஷன் பொருட்கள் இலவசமாக வீட்டிற்கே டோர் டெலிவரி செய்யப்படும்.
  • மஹிஸ்யா, திலி, தம்புல் மற்றும் சஹா சமூகங்கள் ஓபிசி பட்டியலில் சேர்க்கப்படும்.
  • கணவனை இழந்த மற்றும் ஏழை பெண்களுக்கு நிதியுதவித் திட்டம் செயல்படுத்தப்படும்.
  • மாணவர்களுக்கு கடன் அட்டை வழங்கப்படும்.
இத்துடன் மேலும் பல முக்கிய அறிவிப்புகளை தேர்தல் அறிக்கையில்வெளியிட்டுள்ள மம்தா பானர்ஜி, பின்னர் பேசும்போது, இது வேனும் அரசியல் அறிக்கை மட்டுமே அல்ல, மாநிலத்தின் வளர்ச்சி சார்ந்த, மக்களுக்கான அறிக்கையாகும். நாங்கள் மாநிலத்தில் பல்வேறு மக்கள்நலத் திட்டங்களை செயல்படுத்தி உலகளாவிய விருதுகளை வென்றிருக்கிறோம். விவசாயிகளின் வருமானத்தை குறைத்து அவர்களின் வருமானத்தை உயர்த்தியுள்ளோம். மேலும் நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது, மாநில வருவாய் 25,000 கோடி ரூபாயாக இருந்தது. இப்போது அது உயர்ந்து 75,000 கோடி ரூபாயாக உள்ளது.” எனக் கூறினார்.