மகா சிவராத்திரி விழா! இந்த மலைக்கு செல்ல பக்தர்களுக்கு 4  நாட்கள் மட்டுமே அனுமதி! 

0
178
#image_title

மகா சிவராத்திரி விழா! இந்த மலைக்கு செல்ல பக்தர்களுக்கு 4  நாட்கள் மட்டுமே அனுமதி! 

மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு வெள்ளியங்கிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கோவை அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள பூண்டியில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. மிகவும் புகழ்பெற்ற இந்த கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள். வெள்ளியங்கிரி மலையின் 7-வது மலையில் சுயம்புலிங்கம் உள்ளது. இது தென்கைலாயம் என்றும் அழைக்கப்படுகிறது.

அந்த சுயம்பு லிங்கத்தை தரிசிக்க என்று சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி ஆகிய  சிவனுக்கு உகந்த நாட்களில் ஏராளமான பக்தர்கள் 7 மலை ஏறி சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம்.  பக்தர்கள் நடந்து செல்லும் மலைப்பாதை அடர்ந்த வனப்பகுதி ஆகும்.

இந்த நிலையில், மகா சிவராத்திரி விழா நாளை (சனிக்கிழமை) 18-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. எனவே மலை ஏறுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து வனத்துறை மலையேற அனுமதி அளித்துள்ளது.

இதுப்பற்றி வனத்துறை அதிகாரிகள் கூறுகையில்,

ஆண்டுதோறும் சிவராத்திரி மற்றும் சித்ரா பௌர்ணமி ஆகிய இரண்டு விழாக்களுக்கு மட்டுமே மலையேற பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும். ஆனால் தற்போது மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு இன்று வெள்ளிக்கிழமை 17ஆம் தேதி முதல் 20-ஆம்தேதி வரை நான்கு நாட்களுக்கு பக்தர்களுக்கு மலையேற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மலையேறும் பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்வதை தவிர்க்க வேண்டும். மலையில் பிளாஸ்டிக் பாட்டில்கள் வீசுவதை தவிர்க்க புதுவித திட்டத்தை அமல்படுத்தியுள்ளோம். அதன்படி பிளாஸ்டிக் பாட்டில் கொண்டு செல்வோர் 20 ரூபாயை கொடுத்து ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் பக்தர்கள் மலையில் இருந்து இறங்கியதும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பாட்டிலை கொடுத்து பணத்தை பெற்றுக் கொள்ளலாம். இதன் மூலம் மலையில் பிளாஸ்டிக் பொருட்கள் வீசுவது தவிர்க்கப்படும் என்று கூறியுள்ளனர்.