ஆடு, மாடு வளர்த்தால் வரி செலுத்த வேண்டும்! மதுரை மாநகராட்சி அதிரடி!

0
66
Cow, Goat
Cow, Goat

வீடுகளில் ஆடு, மாடு வளர்ப்போர் இனி அரசுக்கு வரி செலுத்த வேண்டும் என மதுரை மாநகராட்சி அறிவித்துள்ளது.

மதுரை மாநகராட்சியில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொள்ள மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் நடவடிக்கை எடுத்து வருகிறார். அதன்படி, மாநகரில் இறைச்சி மற்றும் மீன் கடைகளை நடத்த மாநகராட்சியிடம் உரிமம் பெற வேண்டும். இதற்காக கடையின் அளவுக்கு ஏற்ப, சதுர அடிக்கு ஆண்டு ஒன்றுக்கு 10 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். அதேநேரத்தில் சாலை யோரங்களில் இறைச்சி, மீன் விற்பனை செய்ய அனுமதி கிடையாது என்றும், சாலையோர விற்பனையாளர்களுக்கு உரிமம் வழங்கப்படமாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சியின் அறுவை கூடங்களில் மட்டுமே ஆடு மாடுகளை அறுக்க வேண்டும். கடைகளில் அறுத்து இறைச்சியை விற்பனை செய்தால் 5 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்படும். இறைச்சி கழிவுகளை வாய்க்கால் அல்லது கழிவு நீர் கால்வாய்களில் கொட்டினால் 2 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்படும். இதேபோல, வீடுகளில் ஆடு, மாடு, குதிரை, நாய் வளர்த்தால் மாநகராட்சிக்கு ஆண்டுக்கு 10 ரூபாய் வரி செலுத்த வேண்டும் என்றும், ஆடு, மாடு, குதிரைகளை சாலைகளில் அவிழ்த்து விட்டால் ஆயிரம் ரூபாய் தண்டம் விதிப்பதோடு, பராமரிப்பு தொகையாக 100 ரூபாய் வசூல் செய்யப்படும் என்றும் மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார்.

எனினும், இந்த புதிய நடைமுறைகள் குறித்து ஆட்சேபனைகள் இருந்தால் மாநகராட்சிக்கு எழுத்து மூலம் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கால்நடைகள் வளர்த்தால் தண்டம் என கூறியுள்ள நிலையில், செல்லப் பிராணியாகவும், காவல்காரணாகவும் விளங்கும் நாய் வளர்த்தாலும் வரி செலுத்த வேண்டும் என்று கூறியிருப்பது பொதுமக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.