மதுரை சித்திரைத் திருவிழா! மே 5 விடுமுறை

0
159
#image_title
மதுரை சித்திரைத் திருவிழா! மே 5 விடுமுறை.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நடைபெறும் 12 நாட்களும் மீனாட்சி, சுந்தரேசுவரர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி காலை, இரவு என இருவேளையும் 4 மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.
விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக மீனாட்சி பட்டாபிஷேகம் வருகிற  30-ம் தேதி நடைபெறவுள்ளது. மே 1-ம் தேதி மீனாட்சி சுந்தரேசுவரர் திக்விஜயம் நடைபெறும். சிகர நிகழ்ச்சியாக மே 2-ந் தேதி மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும்,  அதனை தொடர்ந்து 3-ம் தேதி தேரோட்டமும், மே 4-ம் தேதியுடன் சித்திரைத் திருவிழா நிறைவு பெறும்.
சித்திரைத் திருவிழாவின் முக்கிய விழாவான மே 5-ம் தேதி சித்திரை பவுர்ணமியன்று கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிலையில், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வையொட்டி மே 5-ந் தேதி மதுரை மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் அனிஷ்சேகர் அறிவித்துள்ளார்.
வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வினை கண்டுகளிக்க மற்ற மாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் வருகை தரவுள்ளதால், வைகை ஆற்றினை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபடவுள்ளதாக மதுரை மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.