முதலமைச்சர் எடுத்த அதிரடி நடவடிக்கை! பாராட்டு தெரிவித்த உயர்நீதிமன்ற நீதிபதி.

0
86

மாநில முதலமைச்சர்களின் வாகனங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் விதமாக முதல்வர் ஒரு இடத்திற்கு சென்றால் அவர் வாகனத்திற்கு பின்னால் அவர் பாதுகாப்பிற்காக பல வாகனங்கள் அணிவகுத்துச் செல்வது வழக்கம். அத்துடன் முதல்வர் செல்லும் வழியில் மற்ற வாகனங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டு முதலமைச்சர் சென்ற பின்னர் மற்ற வாகனங்கள் அனுமதிக்கப்படுவது வழக்கமாக நடைபெற்று வருகின்றது.

அதோடு முதலமைச்சர் ஒரு வழியில் செல்கிறார் என்றால் அந்த வழியில் மற்ற வாகனங்கள் செல்லாமல் நிறுத்தப்படுவதால் அந்தப் பகுதியில் பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது அது போன்ற சம்பவங்களும் நடந்திருக்கின்றன.

அதேபோல தான் கடந்த அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி சிவாஜி கணேசனின் 96வது பிறந்த நாள் விழாவின்போது முதலமைச்சர் வாகனம் செல்வதற்காக பொதுமக்கள் செல்லும் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. அதில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அவர்களும் மாட்டிக்கொண்டார். போக்குவரத்து நெரிசலில் 15 நிமிடம் காத்து இருந்ததால் தன்னுடைய பணி பாதிக்கப்பட்டிருக்கிறது என்று தெரிவித்து கண்டனம் தெரிவித்தார் நீதிபதி. முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு வழங்கப்படும் அதே மரியாதையை நீதிபதிகளுக்கும் வழங்க வேண்டும் என அறிவுறுத்தி இருந்தார், இந்த சம்பவம் மிகப்பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்தது. இதற்கு தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே எஸ் அழகிரி காவல்துறைக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டிருந்தார். இதனை தொடர்ந்து முதலமைச்சரின் பாதுகாப்பு வாகனங்கள் 12 லிருந்து 6 ஆக குறைக்கப்பட்டது.

அதேபோல முதலமைச்சரின் வாகனங்கள் செல்லும்போது மற்ற வாகனங்கள் நிறுத்தப்படுகின்ற வழி முறையை மாற்றி மற்ற வாகனங்களுடன் ஒன்றாக இணைந்து முதலமைச்சர் வாகனமும் செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றப்பட்டது. இப்படியான சூழ்நிலையில், சென்னை போக்குவரத்தில் ஏற்பட்டு இருக்கின்ற மாற்றங்கள் தொடர்பாக உள்துறை செயலாளர் பிரபாகரனை நேற்று நேரில் வரவழைத்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் போக்குவரத்து நெரிசலை குறைக்க உடனடியாக நடவடிக்கை எடுத்ததற்கு பாராட்டுகள் என்று தெரிவித்திருக்கிறார்.

இதனைத்தொடர்ந்து உள்துறை செயலாளர் பிரபாகரன் தெரிவித்ததாவது முதலமைச்சரின் பாதுகாப்பு வாகனங்கள் 12 லிருந்து 6 ஆக குறைக்கப்பட்டது எதிரில் வரும் வாகனங்கள் நிறுத்தப்படுவது கிடையாது என்று கூறினார்.

இதற்கு பதில் தெரிவித்த நீதிபதி நீதிபதிக்கு அதிக அதிகாரம் இருப்பதாக நினைக்க வேண்டாம் யாரும் உயர்ந்தவர், தாழ்ந்தவர் இல்லை அடுத்த நாளே இதுகுறித்து போக்குவரத்தை சீரமைத்ததற்கு நன்றி என கூறினார். இந்த நடவடிக்கையால் நீதிபதிகள் மட்டுமல்ல பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்து இருக்கிறார்கள் என்றும் அவர் கூறியிருக்கிறார். உடனடியாக நடவடிக்கை மேற்கொண்ட தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் பொதுத்துறை செயலாளர் மற்றும் காவல் துறை இயக்குனர் உள்ளிட்டோருக்கு பாராட்டு தெரிவித்த நீதிபதி முதல்வரின் பாதுகாப்பில் எந்தவிதமான சமரசமும் செய்து கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தி இருக்கிறார்.