நானும் தோனியின் ரசிகன்தான்:ஆனால்? எம் எஸ் கே பிரசாத் கருத்து!

0
90

நானும் தோனியின் ரசிகன்தான்:ஆனால்? எம் எஸ் கே பிரசாத் கருத்து!

தோனியின் எதிர்காலம் இந்திய அணியில் என்ன என்பது குறித்து தேர்வுக் குழுத் தலைவர் எம் எஸ் கே பிரசாத் தெரிவித்துள்ளார்.

யானை இருந்தாலும் மறைந்தாலும் ஆயிரம் பொன் என சொல்லுவார்கள். அதுபோல தோனி ஆறுமாத காலமாக அணியில் இல்லாவிட்டாலும் அவரைப் பற்றிய பேச்சுகளுக்குக் குறைவில்லை. தோனி கடைசியாக இந்திய அணிக்கு விளையாடியது உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டத்தில்தான். 38 வயதாகும் தோனி இந்திய அணியில் விளையாடுவது சந்தேகம்தான் என அன்றுமுதல் பேச்சுகள் எழுந்துள்ளன.

இதற்கிடையில் பிசிசிஐ நிர்வாகம் ஆண்டு தோறும் இந்திய அணி வீரர்களுக்கான ஊதியப் பட்டியலில் இருந்து தோனியை நீக்கியது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. கடந்த ஆண்டு ஏ பிரிவில் இருந்த தோனி ஆண்டுக்கு 5 கோடி ரூபாய் சம்பளம் பெற்றார். ஆனால் இந்த ஆண்டு அவர் எந்த பிரிவிலும் இடம்பெறவில்லை. இதன் மூலம் தோனியின் கிரிக்கெட் வாழ்க்கை கிட்டதட்ட முடிவுக்கு வந்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த முன்னாள் வீரர்களான கபில்தேவ், ரவி சாஸ்திரி ஆகியோரும் தோனி இனி இந்திய அணியில் விளையாட வாய்ப்பு இல்லை என்றே சொல்லியுள்ளனர்.

இந்நிலையில் விரைவில் ஓய்வுப் பெறப்போகும் இந்திய அணியின் தேர்வுகுழுத் தலைவர் எம் எஸ் கே பிரசாத், தோனி குறித்து பேசியுள்ளார். அவர் ‘நான் தோனியின் ஒரு மிகப்பெரிய ரசிகன்.2020 மற்றும் 2021 ஆண்டு என தொடர்ந்து இரு டி20 உலககோப்பை  தொடர் வருவதால் தேர்வுக்குழு தோனியை விட்டு நகரவேண்டிய சூழலுக்கு ஆளானது. தோனி தனது கிரிக்கெட் பயணத்தில் எட்டாத உயரம் இல்லை. இந்தியாவுக்காக அனைத்துக் கோப்பைகளையும் பெற்றுத்தந்துள்ளார். என் பதவியை எடுத்துவிட்டால் நானும் அவரது ரசிகந்தான். ஆனால் இளம்வீரர்களைக் கண்டறிவதுதான் தேர்வுக்குழுவின் பணி.’ எனக் கூறியுள்ளார்.

இதன் மூலம் தோனிக்கு மீண்டும் அணியில் வாய்ப்பு வழங்கப்படும் என தோன்றவில்லை என ரசிகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

author avatar
Parthipan K