பிரச்சனை இல்லா வாழ்க்கை அமைய கருப்பசாமியை வழிபடுவோம்!..

0
213

பிரச்சனை இல்லா வாழ்க்கை அமைய கருப்பசாமியை வழிபடுவோம்!..

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மோகனூர் என்னும் ஊரில் அருள்மிகு நாவலடி கருப்பசாமி திருக்கோயில் அமைந்துள்ளது. நாமக்கல்லில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் மோகனூர் உள்ளது. மோகனூர் பேருந்து நிறுத்தத்திலிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.

அருள்மிகு நாவலடி கருப்பசாமி திருக்கோயிலில் மூலவர் நாவல் மரத்தின் அடியில் காட்சியளிப்பதால் நாவலடியான் என்று பெயர் பெற்றார்.கருப்பசாமி உற்சவர் மரத்தால் செய்யப்பட்டு தனிச்சன்னதியில் நாய் வாகனத்துடன் காட்சியளிக்கிறார். மூலவருடன் மனைவியர் பொம்மி மற்றும் வெள்ளையம்மாள் காட்சியளிக்கின்றனர்.இங்கு உற்சவர் சன்னதிக்கு எதிரே உள்ள பிரகாரத்தில் அருகருகில் மூன்று வேல்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. இத்தலத்தில் வடக்கு வாசலுக்கு நேரே அம்பாள் செல்லாண்டியம்மன் பீடத்தில் அமர்ந்தவாறு காட்சியளிக்கிறார்.

இவரின் கைகளில் உடுக்கை, சூலம், மலர் மற்றும் குங்குமம் வைத்து அசுரனை சம்ஹாரம் செய்தபடி காட்சியளிக்கிறார். அருள்மிகு நாவலடி கருப்பசாமி திருக்கோயிலின் முகப்பில் கருப்பசாமிக்கு உரிய மூன்று குதிரை வாகனங்கள் அமைந்துள்ளது.

இத்தலத்தில் யானை, நந்தி,குதிரை ஆகிய மூன்று வாகனங்கள் காணப்படுவது சிறப்பு.அருள்மிகு நாவலடி கருப்பசாமி திருக்கோயிலில் எல்லா நாளுமே சுவாமிக்கு விசேஷ வழிபாடுகள் நடைபெறும். தினமும் திருவிழா போலவே இவருக்கு விசேஷ அலங்காரம் மற்றும் வைபவங்கள் நடைபெறுகின்றது.

இத்தலத்தில் கோரிக்கை வைப்பவர்கள் தங்களது வேண்டுதலை ஒரு காகிதத்தில் எழுதி நாவல் மரத்தில் கட்டிவிடுகிறார்கள். இவ்வாறு செய்வதால் விரைவில் அந்த கோரிக்கை நிறைவேறும் என்பது நம்பிக்கை.பிறரால் ஏமாற்றப்பட்டவர்கள் தங்களுக்கு நியாயம் கிடைக்க இக்கோயிலில் இருக்கும் மூன்று வேல்களில் மூன்று எலுமிச்சை பழத்தை சொருகி வழிபடுகின்றனர்.

இத்தலத்தில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் சுவாமிக்கு ஆடு, சேவல் பலி கொடுத்தும், மணி கட்டியும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். எனவே இக்கோயிலை காண பக்தர்கள் கூட்டம் தினமும் அலைமோதுகின்றனர்.

 

 

author avatar
Parthipan K